“அறியாமையே நோய்’’ நாம் அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான வாசகம்.
ஆனால் அதே அறியாமையில்தான், நாம் வாழ்நாள் முழுக்க மூழ்கிக் கிடக்கிறோம். சென்ற பகுதியில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தேன்.
நோயினை உங்களுக்குத் தெரிந்த உங்களுடைய மொழியில் சொல்லிப் பழகுங்கள் என்று.
‘மொழிக்கும் நோய்க்கும் என்ன தொடர்பு’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் தொடர்பு இருக்கிறது. வேற்று மொழியில் உங்களுக்குப் புரியாத பெயர்களில் நோய்களை நீங்கள் அணுகும்போது, இனம் புரியாத பயமும், வியப்பும் நிச்சயமாக ஏற்படுகிறது. சாதாரணமாக ‘மூட்டுவலி’ என்பதற்கும், ‘ரூமட்டாய்ட் ஆர்த்தரைடிஸ்’ என்பதற்கும் பொருள் ரீதியில் வேறுபாடு இல்லை. ஆர்த்தோ என்றால் மூட்டு, இட்டிஸ் என்றால் வலி.
பொருள் என்னவோ ஒன்றுதான். ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். மூட்டு வலி என்பது ஒரு பூதாகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதற்கென்று லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அறுவை சிகிச்சைகளை செய்யத் தொடங்கி விட்டனர் நம் மக்கள். ஆனால் மூட்டு வலி என்பது அந்த அளவுக்கு பயம் கொள்ள அவசியம் இல்லாத ஒன்று என்பது பலருக்கும் தெரியாதது வேதனையாக இருக்கிறது.
முதலில் நோய் என்பது வெவ்வேறு கிடையாது. உடம்பில் ஒரே நோய்தான் ஏற்பட முடியும். ஆரோக்கியம் என்பது ஒன்றென்றால் நோயென்பதும் ஒன்றுதான். உடல் என்பது மாவு மில்லில் செயல்படும் இயந்திரங்களைப் போல் அல்ல; ஒரு பாகம் பழுதுபட்டால் அதை மட்டும் சரி செய்து விட்டு வேலையைத் தொடர்வதற்கு.
ஒவ்வொரு உறுப்பும் மற்றொரு உறுப்புடன் இன்றியமையாத தொடர்புடையது. ஒன்று முறையாக இயங்கவில்லை என்றாலும் அது நோய்தான். ஆரோக்கியம் என்பது முழுமை. ஆனால் நவீன மருத்துவங்கள் தற்போதைக்கான அடைப்புகளை மட்டுமே நீக்குகின்றன. அதுதான் சிகிச்சைக்குப் பின்னும் தொடர்ந்து உங்களுக்கு வெவ்வேறு உறுப்பு சாம்பந்தப்பட்ட நோய்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் முந்தைய கட்டுரைகளில் பார்த்தது போல் உடம்பில் தேங்கும் கழிவு, நோய்த் தன்மையை உருவாக்குகிறது. நோய்த்தன்மை ஒன்றுதான். ஆனால் அது வெளிப்படும் இடங்கள்தான் வேறுபடுகின்றன.
உங்களுடைய உடம்பின் எந்த பகுதி பலவீனமாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் நோய் வெளிப்படும். இந்த அடிப்படையான நோய் தன்மையினை புரிந்து கொண்டு அதை களைவதுதான் மருத்துவதின் வேலை அதைத்தான் வள்ளுவர், ‘‘நோய் முதல் நாடி’’ என்கிறார்.
அந்த நோய் முதல் நாடியைக் கண்டறிந்து களைந்து விட்டால், அது முழுமையான ஆரோக்கியத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஆனால் நாம் நோய்களை விட்டு உறுப்புகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால்தான் உறுப்பு விட்டு உறுப்பு, பாகம் விட்டு பாகம் நோய் தாவிக் கொண்டிருக்கிறது. இப்படி எந்தக் குளறுபடிகளும் இல்லாமல் உங்களுக்குள் இருக்கும் மருத்துவர், அந்த நோய்த்தன்மையை அழிக்கும் பணியை மிகத் துல்லியமாக செய்கிறார்.
எப்படி செய்கிறார்? அதற்கு நாம் எந்த வகையில் எல்லாம் இடையூறு செய்கிறோம் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
தொடரும்...
உடல் மொழி அறிவோம் பகுதி 4 - வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்

0 கருத்துகள்