உடல்மொழி அறிவோம் - பகுதி 2

நோய் ஏன் வருகிறது? என்ற கேள்விக்கு இந்த பகுதியில் பதில் உள்ளது!

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நமக்குத் தேவையான மருந்து இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தொடர், TAMIL365 வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த பகுதியில், நமக்குள் இருக்கும் மருந்தை, மருத்துவரைக் கண்டறிவது பற்றி குறிப்பிட்டிருந்தோம். நம்முள் இருப்பவற்றை அறியாமல், நம்மைக் குணப்படுத்திக் கொள்ள இன்னொருவரை நாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம்.

இனி., அடுத்தடுத்த பகுதிகளில் நமக்குள் இருக்கும் மருந்தைத் தேடிய பயணத்தை தொடர்வோம். 

நமக்குள்ளேயே ஒரு மருத்துவர் இருக்கிறார் என்றால் நமக்கு ஏன் நோய்கள் வருகின்றன? நாம் ஏன் வலிகளாலும்,தொந்தரவுகளாலும் இன்னல் பட நேர்கிறது? இதுவே பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதிலைக் கூறுவதற்கு முன்பாக சில அடிப்படையான விஷயங்களைப் பற்றிய தெளிவு நமக்கு அவசியம்.

மனிதன் என்பவன் இயற்கையின் பல்வேறு பரிணாமங்களில் ஒரு சிறு துகள். படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே உன்னதமான, உயர்வான படைப்பாக நம்மைக் கருதுகிறோம். விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பதாகப் பிதற்றிக் கொள்கிறோம். ஆனால் இந்த நேரத்தில் நாம் ஒரு கேள்விக்கு நம்மை நாமே உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாமேதை ஐன்ஸ்டீனின் கூற்று ஒன்று உண்டு. உங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு பாமரனுக்குக் கூட புரியும் அளவில் இருந்தால்தான் அதை விஞ்ஞானத்தின் வளர்ச்சியென்று கூறமுடியும் என்பதுதான் அது. காரணம் எதில் எளிமை இருக்கிறதோ... அதில் எப்போதும் ஒரு உண்மைத் தன்மை  இருக்கிறது. ஆனால் சாதாரணமான காய்ச்சலுக்குக் கூட பல வகைப் பெயர்களையும், பயத்தையும், குழப்பங்களோடும் சேர்ந்த ஒன்றாய்தான் இன்றைய விஞ்ஞானத்தை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதில் நாம் அதிகம் இழந்திருப்பது நம்முடைய ஆரோக்கியத்தையும், நம்பிக்கையையும்தான்.

ஆனால் இயற்கை என்றுமே எளிமையோடுதான் இருக்கிறது அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அதை சிக்கலாக்கிக் கொண்டதெல்லாம் மனிதனுடைய அறிவுதான்.

இங்கே எந்தப் பறவையும், விலங்கும் தமக்காக மருத்துவரைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. இந்த நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும், ஒரு நாளில் மூன்று வேளையும் உண்டே ஆக வேண்டும் என்ற எந்தக் கடமையும் அவற்றிற்கு இல்லை. ஒரு நாளுக்கு இரண்டு லிட்டர் அல்லது மூன்று லிட்டர் நீர் அருந்தியே ஆக வேண்டுமென்ற அளவீடுகளெல்லாம் நிச்சயம் அவற்றிடம் இல்லை. இவை எதுவுமே இல்லாத போதும் அவை அரோக்கியமாகவே வாழ்ந்து வருகின்றன. நோய்கள் வருவதெல்லாம் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்தான். "காட்டில் தன் போக்கில் செல்லும் எந்த உயிரினமும் மனிதனை விட ஆரோக்கியமானதாகவும், சுதந்திரமானதுமாகவே இருக்கின்றன".

ஆனால் உணவு துவங்கி, உறக்கம் வரை அத்தனை அளவுகோள்களையும் மிகச்சரியாய் கடைபிடிக்கும் நமக்கு ஏன் நோய்கள் வருகின்றன? என்றாவது யோசித்ததுண்டா?

நாணலும் தாவரம்தான்; நெல்லும் தாவரம்தான். எத்தனை பெரிய வெள்ளம் வந்தாலும் நாணல் தாங்கும் ஆனால் மூன்று நாள் தொடர் மழை பெய்து, மழைநீரில் மூழ்கினால் நெல் அழுகிவிடும். காரணம் தேவை என்பது ஒவ்வோர் உயிருக்கும் மாறுபடக்கூடியது. அதைப் போலவேதான் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற போதும் தேவை என்பது ஒவ்வோர் உயிருக்கும் மாறுபடும். அதை அறியாமல் பொதுப்படையான தரவுகளையும், ஆராய்ச்சிகளையும் மனதில் கொண்டு நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு வாய் உணவும், நீரும் நம்மில் நோயின் விதைகளைத் தூவிவிட்டுப் போகின்றன.

அப்போது எதுதான் அளவு? எப்படி தான் உண்ணுவது? என்று நீங்கள் கேட்டால் இதற்குரிய பதிலே நாம் துவக்கத்தில் கேட்ட கேள்விக்கும் பதிலாகிறது.

ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சத்தின் ஓர் ஒப்பற்ற படைப்பு. ஒன்றை ஒன்று நகலெடுக்காத தனித்துவமான படைப்பு. இங்கே என்னாலோ அல்லது எந்த ஒரு விஞ்ஞானியாலோ உங்களுக்கு எது மிகச் சரியானதென்று கூறவே முடியாது. ஆனால் ஒருவரால் முடியும். அதுதான் உங்கள் உணர்வுகள். ஆனால் அவற்றைத்தான் நாம் மதிப்பதே இல்லையே.

யார் யாருடைய பேச்சை எல்லாமோ நம் வாழ்வில் கேட்போம். ஆனால் நாம் ஜனித்த நாளில் இருந்து, உடல் விட்டு உயிர் பிரியும் நாள் வரை நம்மோடு எப்போதும் இருக்கும், நமக்காகவே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும், நம்முடைய உடம்பின் பேச்சுக்கு மட்டும் காது கொடுக்கக்கூட நாம் தயாராக இல்லை.

பசி, தாகம், வலி, அழுகை, மகிழ்ச்சி, உறக்கம், துக்கம் என நீங்கள் உணரும் அத்தனையும் அது பேசுவதால்தான். ஆனால் அது கேட்கப்படுவதே இல்லை.

நம்முடைய  இன்றைய தலைமுறையினரிடம் கேட்டால், பசியா.....?? அது காலைல எட்டு மணிக்கு வரும். மதியம் ஒரு மணிக்கு வரும். இரவு எட்டு மணிக்கு வரும் என்று ஏதோ புகைவண்டி அறிவிப்பைப் போல கூறுகிறார்கள். அவர்களை விடுங்கள். நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய ஒவ்வொரு வேளை உணவும் பசித்த பின்புதான் எடுத்துக் கொள்ளப் படுகிறதா? போதும் என்ற உணர்வு வந்ததும் நிறுத்திக்கொள்ளப் படுகிறதா?

இல்லையென்றால் இனி உங்களுக்கு இது ஞாபகம் வரட்டும். தேவை முடிந்த பின்னும் தட்டில் இட்ட உணவு வீணாகிவிடும் என்று வயிற்றில் இட்டுக் கொள்ளும் ஒவ்வொரு வாய் உணவும்தான் உடலில் தோன்றும் நோய்களுக்கு ஆதி காரணியாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் வலி, தொந்தரவு, நோய் என்ற அத்தனைக்கும் காரணம் இது போன்ற உணர்வுகளை நீங்கள் நிராகரிப்பது அல்லது சரியாக புரிந்து கொள்ளாதது தான். அதை எப்படி புரிந்துகொள்வது?

அடுத்த பகுதியில் பார்ப்போம்!

உண்மையில் பசியென்பது மற்றவற்றைப் போல சாதாரணமான உணர்வே அல்ல. அது ஒரு ஆற்றல். பசியென்பது ஒரு பெரும் சக்தி. அதை உலகின் மையம் என்று கூட கூறலாம். பசி இல்லையென்றால் உலகில் பணமும் இல்லை, உறவும் இல்லை, தேடலும் இல்லை, வாழ்வும் இல்லை. ஆனால் ஒருசில வெற்றுச் சடங்குகளைப் போலவே உண்ணுதல் என்பது இன்றைய நாட்களில் வெறும் சடங்காகிப் போய்விட்டது. இந்த நிலை நீடித்தால் மனிதன் என்ன ஆவான்?

தொடர்ந்து ஆராய்வோம்....!



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. தோழர் தெரிந்த செய்திகள். ஆனால் இந்த பதிவை படிக்க படிக்க புத்துணர்ச்சி அளிக்கிறது தோழர். சிறப்பு.

    பதிலளிநீக்கு
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu