இன்றிலிருந்து சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு, என் வாழ்வின் புதிய அத்தியாயம் ஒன்று தன்னைத் தானே எழுதிக்கொண்டு, என்னையும் திருத்தி எழுதியது.அந்த அத்தியாயத்திற்கு நாங்கள் கொடுத்த பெயர் ஆழி!
பெற்றுக்கொண்ட பெயராலோ என்னவோ, அதுவரை நாங்கள் எட்டாத ஆழங்களுக்கெல்லாம் ஆழி எங்களை அழைத்துச் சென்றாள். அதுவரை மழையாய் வீழ்ந்த அத்தனைக் கேள்விகளுக்கும், ஒற்றை முத்துப் பதிலாய் வந்து வீழ்ந்தாள் ஆழி.
கருவுற்ற நாளில் இருந்து, இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நொடி வரையிலும் என் உடலில் துவங்கி, இந்த உலகம் வரை அத்தனை அத்தனைக் கற்பிதங்களி்ன் முடிச்சுகளைக் கட்டவிழ்த்திருக்கிறாள் ஆழி.
ஆழி என்ற சொல்லை தனிப்பெயராக அன்றி குழந்தைமை என்ற பொதுப்பெயராக்கி வரையறுப்பதே அதற்குச் செய்யும் நியாயமாக இருக்கமுடியும்.
இருத்தல் தொடங்கி இயற்கை வரைக்குமான, எண்ண முடிந்த அத்தனைக் கேள்விகளுக்கும் எண்ணிலடங்கா பதில்களைத் தரவல்லதொரு படைப்பு குழந்தை.
இயற்கையின் தாய்மடி விட்டு தொலைந்து,தூரப் பட்டு ,தன்னையே தொலைத்து நிற்கும் எல்லா மனிதர்களுக்குமென, மீண்டும் தாய் மடி சேர, தன்னைத் தானே கண்டடைந்து கொள்ள, தன் மூலமாகவே இயற்கையால் கொடுத்து அனுப்பப்படும் கடவுச்சீட்டு தான் குழந்தைகள்.ஆனால் அவை நம்முள் சூல் கொள்ளத் துவங்கிய நாளிருந்தே ,அதுகுறித்த அத்தனை சிக்கல்களை சமீபத்திய மனித குலம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
வலி என்ற சொல்லில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாய்த் தான் நம்முடைய தற்காலச் சமூகம் பிரசவத்தைப் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால் என்னுடைய பிரசவத்தில் எனக்கு நேர்ந்த அனுபவம் இப்படிச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் இருந்து முற்றிலும் நேர்மாறனது. ஆனால் அது எதேச்சையாக, அதிர்ஷ்டத்தால் அல்ல வெறும் நம்பிக்கையால் நிகழ்ந்தது அல்ல என்பதையே நான் இன்னும் அழுத்தமாக வலியுறுத்த விழைகிறேன்.
எனக்கு அடிப்படையாகவே சில கேள்விகள் இருக்கின்றன.பிரசவம் எனப்படுவது மனிதனுக்கு நேரும் நோயா?இல்லை என்றால் நாம் ஏன் மருந்துகளை உட்கொள்கிறொம்? ஆம் என்றால் நோய்க்காக அளிக்கப்படும் மருந்துகள் சுகத்தைத் தானே தர வேண்டும்? ஆனால் மருந்துகள் தரும் நலம்(என நம்பப்படும்) ஆரோக்கியத்தில் ஏன் சுகங்களன்றி வேதனைகளே மிகுந்துள்ளன?
நவீனமென்பது வாழ்வை எளிமை படுத்தத் தானென்றால், ஆடு மாடுகளுக்கு மிக எளிமையாய் வாய்க்கும் சுகமான பிரசவம், நவீனத்தின் உச்சியில் இருக்கும் மனிதனுக்கு இப்போது ஏன் தூரப்பட்டுப் போயிருக்கிறது?
இதற்கு நம்மிடம் பதில்கள் இருக்கின்றனவா? என்னிடம் இருக்கிறது! நம்மிடம் இருக்கிறது! ஆனால் அதுவா முக்கியம் கேட்கும் இடத்தில் நம் செவிகள் இருக்கின்றனவா?
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை நாம் அறிவோம். நமக்கு நேரும் விளைவுகள் எதேச்சையாக நிகழ்பவை அல்ல. விளைவின் வெளிப்பாட்டைக் கொண்டு செயலின் தன்மைகளை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். செயல் கடினமானதாக இருக்கலாம்; ஆனால் விளைவுகள் கடினமானதாகத் தோன்றுகிறது என்றால் அது செய்யப்பட வேண்டிய செயலில் நிகழ்ந்த பிழை என்று புரிந்துகொள்ளலாம். அப்படி என்னென்ன பிழைகளைத் தான் நாம் செய்து வருகிறோம்?
சூழல் குறித்த புரிதல் இல்லாத செயல்கள், முழுமையை நோக்கி நகர்வதில்லை அல்லது ஆபத்தான தன்மையோடு நகர்கின்றன.
மேலும் உடல் குறித்த விஞ்ஞானத்தை நவீன மருத்துவம் தன் சோதனைக் குழாய் சிசுவாய் கருதுகிறது.
புரிதலற்ற நம்பிக்கைகளை நாம் மூடப்பழக்கங்கள் என்று வரையறுக்கிறோம் என்றால் சுய புரிதல் இல்லாத அல்லது சுய புரிதலை எட்டாத விஞ்ஞானக் கோட்பாடுகளை மட்டும் நாம் எப்படி முற்போக்காக ஏற்றுக்கொள்ள முடியும்?
உண்மையைக் கண்டறிய மேற்கொள்ளும் தேடலுக்கும், தனக்கு வசதியான கருத்தை அல்லது நம்பிக்கையை நியாயப் படுத்த நிகழும் தேடலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நம்பிக்கைய நியாயப்படுத்த நிகழும் தேடலை விட மிக ஆபத்தானது வேறொன்றில்லை.
அந்த ஆபத்துக்குத் தான் நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம். எப்படி?
பார்ப்போம்......
7 கருத்துகள்
அருமை தொடர்ந்து வெளிவருபவைக்காக காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குNice line valuable point it's true
பதிலளிநீக்குதங்களின் படைப்பை படிக்க படிக்க மகிழ்ச்சி தோழர். ஆழி -. ஓவ்வொரு குழந்தை பிறக்கும் போது குழந்தை மட்டும் பிறப்பதில்லை பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்ற சொல்லாடல் நிதர்சனம். ஆவலுடன் தொடர்ச்சியை தொடர்ந்து வாசிக்க..... அன்புடன்
பதிலளிநீக்குதிருமதி சாந்தி சரவணன்
நன்றி தோழர்
நீக்குமிகவும் அருமை அடுத்த வெளியீடுக்காக காத்திருக்கிறேன் நன்றி
பதிலளிநீக்குஆழித்தாயின் ஒவ்வொரு வரிகளும் உணர்வுப்பூர்வமானவை. பிரசவ அனுபவங்களை பின்வரும் வெளியிடுகளில் பகிருங்கள் தோழர்.
பதிலளிநீக்குசிறப்பான துவக்கம் தோழர்.உடலின் அற்புதத்தையும்
பதிலளிநீக்குமருந்து இல்லா சமுதாயம் பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு நம்மால் இயன்ற அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . அவ்வகையில் தாங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் பயனுள்ளதாக இருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர் .