தேர்தல் காலத்தில் பணப் பறிமுதல் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே இதுகுறித்து தெளிவான, விரிவான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என்று மதுரை பாண்டியன் அப்பளம் நிறுவனத்தின் நிறுவனரும், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநில தலைவருமான க.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பது ஜனநாயகத்தை காக்கும் நல்ல முயற்சிதான். ஆனால் அதன் நடைமுறைகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை சிக்கலில் ஆழ்த்தக் கூடாது.
இன்றைய கால சூழ்நிலையில் ரூ.50,000 என்பது பெரிய தொகையாக கருத முடியாது. ஒரு சிறு வியாபாரி, விவசாயி அல்லது போக்குவரத்து தொழிலாளி தினசரி பண பரிவர்த்தனைகளுக்கே அதைவிட அதிகமான தொகையை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக ஒரு லாரி ஓட்டுநர் சரக்குகளை ஏற்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்கிறார். வழியில் டீசல் நிரப்ப வேண்டும், உணவு சாப்பிட வேண்டும், சாலைச் செலவுகள் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் ரூ.50,000 என்ற வரம்பு நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்?
அதேபோல் அப்பளம் வடகம் வத்தல் விற்பனையாளர்கள் வெளியூர்களிலும் வெளி மாநிலத்திலும் பணங்களை வசூல் செய்து கொண்டு வருவார் இவர்களுக்குஇந்த அளவு சரியாக இருக்குமா தேர்தல் ஆணையம் என்ன செய்ய இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. பலசரக்கு கடைகளில் ஒரு நாளைக்கு ரூ.1,00,000க்கும் மேல் விற்பனை நடக்கலாம். விவசாயிகள் விளைபொருட்களை விற்று பணம் எடுத்துச் செல்லலாம். திருமணச் செலவுகளுக்காக குடும்பங்கள் அதிக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கைச் செயல்பாடுகளை நடத்தும் சாதாரண மக்கள்.
எனவே எங்களுடைய தெளிவான நிலைப்பாடு என்னவென்றால், பணம் எடுத்துச் செல்லும் வரம்பை இன்றைய பொருளாதார நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். அல்லது எந்தெந்த சூழ்நிலைகளில் என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மேலும், பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் பணம் எடுத்துச் சென்றால் அந்த பணத்தை உடனடியாக சரிபார்த்து விடுவிக்க வேண்டும். “சோதனை” என்ற பெயரில் பொதுமக்களை அலையவிட்டு சிரமப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜனநாயகத்தை பாதுகாப்பது அவசியம். ஆனால் அந்த முயற்சி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்பதே எங்களுடைய நோக்கம்.
இவ்வாறு க.திருமுருகன் கூறியுள்ளார்.

0 கருத்துகள்