குரலற்ற சமூக மக்களின் அரசியல் சமநீதிக்கு குரல் கொடுக்க தமிழக நீதிக் கட்சி தொடக்கம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட்  அருகே அமைந்துள்ள சமூக நீதி திடலில் வருகிற 20ம்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்கு தமிழக நீதிக் கட்சி அறிமுக விழா மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி பந்தல் கால் நடும் நிகழ்வு 06-07-2025  அன்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர், தலைவர் வாழவந்திநாடு கே. சரவணன் என்கிற வாழவந்தியார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பெருந்துறையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வாழவந்தியார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக கொங்குநாடு வேட்டுவகவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் இளைஞரணி மாநில தலைவர் மதி கவுண்டர், கொங்கர் கலை பண்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் வேங்கலன் கி.இரவிக்குமார், உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மாநில தலைவர் தேக்கமலை, கட்சியின் மாநிலச் பொதுச்செயலாளர் திரு.பாஸ்கரன், மாநில பொருளாளர் திரு. சசிக்குமார் , மாநில பொறுப்பாளர்கள் திரு.கவுந்தி மணி, ராம் கார்த்தி, ஏ கே என் கார்த்திகேயன், ரவிக்குமார், மதன் மாசி,  மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மாதேஷ், நவீன்குமார், முருகேஷ் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் வாழவந்தியார் பேசியதாவது:

வருகிற ஜூலை 20தேதி நமக்கெல்லாம் மிக முக்கியமான நாள். இந்த நன்னாளுக்காக நாமெல்லாம் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். நமது கட்சியின் துவக்க விழா மற்றும் கொள்கை விளக்க பெரு விழா  நடைபெறவிருக்கிறது. அந்த விழாவில் 30க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட்டது ஏன்? அதன் கொள்கை, கோட்பாடுகள் எல்லாவற்றையும் துவக்க விழா மற்றும் கொள்கை பெருவிழாவில்  தெளிவாக அறிவிக்கவிருக்கிறேன். நமது துவக்க விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்தித்துப் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அரசியல் அதிகாரம் இல்லாததால் 400க்கும் மேற்பட்ட ஜாதி மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கல்விக் கடனில் தொடங்கி தொழில்கடன், விவசாயக் கடன், நகைக்கடன், தள்ளுபடி போன்ற எந்த வொரு தகவலும் தெரியாது. அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் எப்படி கிடைக்கிறது என்பது யாருக்கும் தெரியாத சூழல்தான் உள்ளது. இதில் கிடைக்கக் கூடிய சலுகைகளை பெரும்பான்மை சமுதாயங்கள் என்கிற  தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கிற சமுதாயத்தினர் மட்டும் தங்கள் பிரதிநிதிகள் வாயிலாக அறிந்து பெற்று, நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மையெல்லாம் ஓட்டுப் போடும் இயந்திரங்களாவே அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாட்டில்தான் தமிழ்நாடு நீதிக் கட்சி தொடங்கபட்டுள்ளது.

நமக்கு அரசியல், அதிகாரம் நிச்சயமாக தேவை. அரசியல் அதிகாரம் இல்லாததால் 78 ஆண்டுகளாக நாம் பாதிக்கப்பட்டு வருகிறோம். நானே நேரடியாக பாதிக்கப்பட்டதால் இனி நம்மவர்கள், நம்மைபோல உள்ளவர்கள் பாதிக்கப் படக் கூடாது என்பதால் கட்சியைத் தொடங்குகிறோம். கடந்த பல ஆண்டுகளாக நாம் கல்வி, வேலைவாய்ப்பு, கோயில்கள் என் பல வழிகளில் பல உதவிகளைச் செய்துள்ளோம். ஆனால் நியாயமான கோரிக்கையுடன் அரசு நிர்வாகத்தை அணுகும்போது ஜாதி சங்கம் என்ற குறுகிய வட்டத்தில் நம்மை அடைக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் நம்மிடம் இருந்தாலும் அதற்கான மரியாதை எங்கும் கிடைக்கவில்லை. அதேசமயம் சிறிய அளவில் கட்சி வைத்திருப்பர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. எளிதில் அரசு நிர்வாகத்தை அவர்களால் அணுக முடிகிறது. அதனால் நமக்கான குரலை ஓங்கி ஒலிக்க நமக்கான ஒரு கட்சி தேவைப்படுகிறது.

ஏழை எளியவர்களின் குரல் இங்கே இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களுக்கு கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஓட்டு அரசியல் மட்டும்தான். அந்த ஓட்டு அரசியலில் ஒரு தொகுதிக்கு குறைந்தது 30,000 ஓட்டு எங்களிடம் இருக்கிறது என காட்டவேண்டிய சூழலில் இருக்கிறோம். வைரத்தை வைராத்தால் அறுக்க முடியும் என்பதுபோல, முள்ளை முள்ளால் எடுக்க முடியும் என்பது போல இங்கேயுள்ள ஆட்சியாளர்களுக்கு அவர்களது வழியில் சென்றால்தான் தெரியும். எனவே இங்கே வந்திருக்கும் அனைத்து நிர்வாகிகளையும் நான் கேட்டுக் கொள்வது.... எதைச் செய்தாலும் முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்பதைத்தான்.

நான் தேடிப் போகும் அரசியல்வாதி அல்ல; என்னைத் தேடி வர வைக்கும் அரசியல்வாதியாக செயல்படுவேன். இதுவரை எவ்வளவோ நெருக்கடிகளைச் சந்தித்துள்ளேன். அப்போதுகூட நான் எந்த அதிகார வர்க்கத்தையும் நேரில் சென்றுப் பார்த்ததில்லை. இன்று நான் 8.5 கோடி மக்களின் பிரதிநிதியாக வந்து நிற்கிறேன். அரசியலை நோக்கி நாம் நகர்வது அரசியல் அல்ல; அரசியல் நம்மை நோக்கி நகர்வதுதான் அரசியல் என்பதே  நமது நிலைப்பாடு. நான் யாரையும் குறை சொல்வதற்காக இந்த இடத்திற்கு வரவில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் செய்யாத வேலையை செய்து முடிப்பதற்காகத்தான் இந்த அரசியல் தளத்திற்கு வந்திருக்கிறேன். சமூக நீதி சரியாக கடைப்பிடிக்கப் பட்டிருந்தால் தமிழக நீதிக் கட்சி உருவாகியிருக்காது. ஆண்ட மற்றும் ஆளுங்கட்சியாக இருக்கக் கூடிய கட்சிகள் இங்கே குரலற்றவர்களாக இருக்கக் கூடிய 400க்கும் மேற்பட்ட சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டுக் கொடுக்காததன் விளைவுதான் நமது கட்சியின் தொடக்கம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் உண்மையான சமூகநீதி. 69 சதவீதம் இடஒதுக்கீடு என்பது ஒரு நம்பர்தான். அரசியலில் 100 சதவீத இட ஒதுக்கீடுதான், அனைவருக்குமான இடஒதுக்கீடுதான் சரியான சமூக நீதியாகும். சமூக நீதிக்காக குரல் கொடுக்க அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்; அதற்கான பணியை தமிழக நீதிக் கட்சி தொடர்ந்து செய்யவிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu