பாஜக பிரச்சாரத்தை முடக்க நினைக்கும் திமுக: தென்காசியில் பரபரப்பு

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த தோல்வி பயத்தால் எனது பிரச்சாரத்தை அதிகாரிகள் துணையுடன் முடக்க நினைக்கிறார்கள், என்று தென்காசி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெ.ஜான் பாண்டியன் தேர்தல் அதிகாரியை சந்திக்க இன்று (31/03-2024) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம், தனது சமூக வலைதள பக்கங்களில் நடைபெறும் பிரச்சாரத்தை திமுக தூண்டுதலின் பெயரில் சிலர் முடக்க நினைப்பதாக புகார் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அளித்துள்ள புகார் மனுவில், நான் மேற்சொன்ன தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக வேட்பாளராக போட்டியிடுகிறேன். என்னுடைய சமூக வலைதள கணக்குகளில் நான் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக கூறி என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். ஆனால் அப்படி எதுவுமே என் சமூக வலைதளங்களில் இல்லை. திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த விசாரணைக்கு என்னை அழைத்து என் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்ய வைத்த பி.ஆர்.ஓ. மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த வேட்பாளர் ஜான் பாண்டியன், திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் எனது பிரச்சாரத்தை முடக்க நினைக்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். எங்கள் பக்கங்களில் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடிய வகையில் எந்தவொரு பதிவுகளும் இடம்பெறவில்லை. எனது நலம்விரும்பிகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் போடும் பதிவுகளுக்கு எப்படி அனுமதி வாங்க முடியும். திமுக வேட்பாளரின் சமூக வலைதளங்களில் பாரத பிரதமர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் இடபெற்றுள்ளன. அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக தூண்டுதலின் பெயரில் அதிகாரிகள் எனது பிரச்சாரத்தை முடக்க நினைக்கிறார்கள், என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu