திருநெல்வேலியில் புதிய வாகனங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யாமல் வாடிக்கைகாளர்களை மூன்று மாதங்களுக்கும் மேலாக ஸ்கோடா நிறுவனம் இழுத்தடித்து வருகிறது. இதுபற்றி டீலர்ஷிப்பில் முறையிடும் வாடிக்கையாளர்களுக்கும் முறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முடிவு செய்துள்ளார்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா கடந்த சில ஆண்டுகளில் இந்திய வாகன சந்தையில் நிலையான மற்றும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இந்தியா 2.0திட்டத்தின் கீழ் இந்திய சந்தைக்கே ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட குஷாக், ஸ்லேவியா, கோடியாக், கைலாக் போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை நாட்டெங்கும் விரிவுபடுத்தியிருப்பதும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக சமீப காலத்தில் அதிகப்படியான விற்பனை வளர்ச்சி, புதிய வாடிக்கையாளர் நம்பிக்கை, மற்றும் தரமான ஐரோப்பிய இன்ஜினியரிங்-க்கு ஏற்ற விலை என்ற அணுகுமுறை ஸ்கோடாவுக்கு இந்தியாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒரு நம்பகமான மற்றும் வளர்ந்து வரும் பிரீமியம் மாஸ்-மார்க்கெட் பிராண்டாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.
ஸ்கோடா கார்களை இந்தியச் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்து முன்னணி இடத்திற்கு வருவதற்காக முயன்று வரும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது போல திருநெல்வேலியில் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனால் புதிய ஸ்கோடா கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் ஸ்கோடா டீலர்ஷிப்பான ஆரா ஸ்கோடாவின் சேவை குறைபாடு உச்சகட்டத்தில் இருப்பத்தால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், புதிய கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இன்னமும் ஆர்டிஓவில் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருகிறார்கள். இதுபற்றி ஷோரூமில் முறையிட்டால், இன்று, நாளை, அடுத்த வாரம் என்று ஏதாவது ஒரு தேதியைச் சொல்லி சமாளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். டீலர்ஷிப்பின் மெத்தனப் போக்கால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு வேண்டிகோள் கடிதத்தை இ-மெயில் மூலம் அனுப்பினார். அதற்கு பதில் அளித்த கார்ப்பரேட் நிர்வாகிகள், உடனடியாக பிரச்சினை சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் டீலர்ஷிப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.
ஸ்கோடா போன்ற பெரிய நிறுவனத்தின் இந்த மெத்தனப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி வாடிக்கையாளர்கள்தான். காருக்கான முழு தொகையையும் கட்டிவிட்டு, காரை டெலிவரி எடுத்து நம்பர் ப்ளேட் இல்லாமல் பல மாதங்களாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம்பர் ப்ளேட் இல்லாத வாகனம் என்பதால் காவல்துறை வாகனத் தணிக்கையின்போது, ஒவ்வொரு முறையும் குற்றவாளி போல நின்று பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வெளியூர் பயணங்களிலும் டோல்கேட்களில் அபராதத்துடன் பணம் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையில் ஸ்கோடா வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
எத்தனை முறை முறையிட்டாலும் முறையான பதில் அளிக்காத ஸ்கோடாவின் மெத்தனப் போக்கால் பாதிக்கப்பட்ட வாடிக்க்கையாளர் ஒருவர் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை கையாள முடிவு செய்துள்ளார். சேவை குறைபாட்டிற்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும், சேவை குறைபாட்டில் ஈடுபட்டு வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஸ்கோடா டீலர்ஷிப் மீதும், தகுதியான நபருக்கு டீலர்ஷிப் வழங்காத ஸ்கோடா நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். திருநெல்வேலி ஸ்கோடாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்ளவிருப்பதாக மேற்படி வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்