மத்திய அரசின் ‘மிஷன் சக்தி’ செயலியில் தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களும் தங்களது தாய்மொழியான தமிழில் மிஷன் சக்தி செயலியைப் பயன்படுத்திப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த சேவைகளை எளிதாகப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, பெண்களின் பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய, மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என வலியுறுத்தினார். குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் பயன்பாட்டிற்காக மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரின் கோரிக்கையைத் தொடர்ந்து, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழியை இடம்பெறச் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பெண்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிச் சேவைகள் தமிழ்மொழி பேசும் மக்களையும் எளிதில் சென்றடைய உதவும்.
இது குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கூறுகையில், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்கள் சார்பில் நான் வைத்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிஷன் சக்தி செயலியில் தமிழ்மொழியை இணைக்க உறுதுணையாக இருந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணாதேவி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். மக்களின் தேவையை உணர்ந்து, கோரிக்கைக்கு உடனடியாகச் செயல்பட்டு தமிழ் மொழிக்கு உரிய இடமளித்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்
#tamilnadugovernment#jegadeshwari#Jegatheeshwari#politics#tvk#rajapalayam#minister#Ministerjagadeeswari,


0 கருத்துகள்