ராஜபாளயம் தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டசில நாட்களிலேயே தங்களது குறைகளை தளபதி விஜய் அரசு தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் நூற்றுக்கான புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், விருதுநகர் மாவட்டம் முழுவதும்
“விஜய் விஜயம்” செயலியை விரிவாக்கம் செய்யவிருப்பதாக, அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மக்கள் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் தொகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி முன்னெடுப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு “விஜய் விஜயம்” செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் தொகுதிக்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. மேலும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் இந்த செயலியை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கூறுகையில், “‘விஜய் விஜயம்’ செயலிக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது முதல்வர் தளபதி விஜய் அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலிருந்தும் இந்த சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வருகின்றன. எனவே, கட்சி பேதமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து, ‘விஜய் விஜயம்’ செயலியை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.
மேலும், பொதுமக்கள் தங்களது பகுதி தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து “விஜய் விஜயம்” செயலி மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



0 கருத்துகள்