புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களே நாளைய தொழில்துறை வளர்ச்சியை வழிநடத்தும் ; சென்னை WAREMAT கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் பி. மதன் ராஜா பேச்சு

இந்தியாவின் கிடங்கு மேலாண்மை, மெட்டீரியல் ஹேண்ட்லிங், லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங், தொழில்துறை தானியக்கம், ரோபோட்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் "WAREMAT - TOPACK - AUTOROBOT - COSLOG - WS-AUTX 2026" என்ற மாபெரும் 3 நாள் தொழில்துறை வணிகக் கண்காட்சி 7வது பதிப்பு இன்று  சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  துவங்கியது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை மிடாஸ் டச் ஈவென்ட்ஸ் & டிரேட் ஃபேர்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

துவக்க விழாவில், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பி.மதன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் ஃபிக்கி (FICCI) இணைத் தலைவர் திரு. பூபேஷ் நாகராஜன், டான்ஸ்டியா (TANSTIA) தலைவர் திரு. எஸ்.வாசுதேவன், சி.ஐ.ஏ. (CIA) தலைவர் திரு. டி. தேவகுமார், ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத் தலைவர், திரு.எஸ். நரசிம்மன் மற்றும் எம்.எஸ்.எம்.இ. இயக்குநர் திரு. தயாளன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள்  பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

WAREMAT 2026 -7வது பதிப்பு புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், சாத்தியமான சப்ளையர்களை சந்திக்கவும், வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், சந்தையில் தங்களது வர்த்தக இருப்பை மேலும் விரிவுபடுத்தவும் தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுமையான தொழில்நுட்பங்களை ஆராயவும், வணிகத் தொடர்புகளை வலுப்படுத்தவும், இந்தியாவின் தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சூழலமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிக்கவும் நிறுவனங்களுக்கு மதிப்புமிக்க தளமாக அமைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

மேலும், இக்கண்காட்சியில் B2B வணிக நெட்வொர்க்கிங் மற்றும் அறிவுப் பரிமாற்ற (Knowledge Sharing) அமர்வுகளும் இடம்பெறவுள்ளன. இதன் மூலம், தானியக்கம், கிடங்கு மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management) துறைகளில் உருவாகி வரும் புதிய போக்குகள் குறித்து தொழில்துறை வல்லுநர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், விவாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

அமைச்சர் பி. மதன் ராஜா பேசுகையில், “தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. ஒரு தொழிற்சாலையின் வெற்றி தரமான தயாரிப்புகளை உருவாக்குவதில் மட்டுமல்ல; கிடங்கு மேலாண்மை, பொருள் கையாளுதல், பேக்கேஜிங் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையை நவீன தொழில் நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பதிலும் உள்ளது. WAREMAT போன்ற கண்காட்சிகள் புதிய தொழில்நுட்பங்களை நேரில் அறிந்து கொள்ளவும், வணிகத் தொடர்புகளை உருவாக்கவும், புதிய சந்தைகளை அடையவும் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களே உலகளாவிய போட்டியில் முன்னிலை பெறும். தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்,” என்றார்.

கண்காட்சி குறித்து Midaas Touch Events & Trade Fairs LLP நிறுவனத்தின் இயக்குநர் திரு. டி.விவேகானந்தன் கூறுகையில், தென்னிந்தியாவில் தொழில்துறை கொள்முதல் மற்றும் வணிக வலையமைப்பை உருவாக்கும் முக்கிய தளமாக WAREMAT தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைத்து புதிய தீர்வுகளை ஆராயவும் வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் காணவும் உதவுவதே WAREMAT 2026-ன் நோக்கமாகும். கிடங்கு மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ், தானியக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி (Supply Chain) தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, நாடு முழுவதும் உள்ள தொழில்துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது" என்றார்.

வலுவான உற்பத்தித் துறைச் சூழல், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகத் தொழில்கள், துறைமுகங்கள், தொழில்துறை வழித்தடங்கள், மேம்பட்ட லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பு, இ-காமர்ஸ் வளர்ச்சி மற்றும் விரிவடைந்து வரும் கிடங்கு மேலாண்மைத் துறை ஆகியவை சென்னையை மெட்டீரியல் ஹேண்ட்லிங் மற்றும் விநியோகச் சங்கிலி தொழில்நுட்பங்களுக்கான முக்கிய மூலோபாய சந்தையாக உருவாக்கியுள்ளது.

பல முன்னணி நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியுள்ளது. மேலும், நேரடி செயல்விளக்கங்கள் (Live Demonstrations) மூலம், மேம்பட்ட தொழில்துறை தீர்வுகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பையும், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் பார்வையாளர்கள் பெறுவார்கள்.

WAREMAT கண்காட்சியின் முந்தைய பதிப்புகளுக்கு தொழில்துறையினரிடமிருந்து சிறப்பான வரவேற்பும் அதிகளவிலான பங்கேற்பும் கிடைத்துள்ளது. மேலும், உற்பத்தியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), கிடங்கு இயக்குநர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், கொள்முதல் தலைவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பிற தொழில் முடிவெடுப்பாளர்கள் மத்தியில் தனது வரம்பையும் செல்வாக்கையும் இந்தக் கண்காட்சி தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

கிடங்கு உள்கட்டமைப்பு, சேமிப்பு மற்றும் ரேக்கிங் அமைப்புகள், ஃபோர்க்லிஃப்ட்கள் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் உபகரணங்கள், லாஜிஸ்டிக்ஸ் தானியக்கம், ரோபோட்டிக்ஸ், இன்ட்ராலாஜிஸ்டிக்ஸ் (Intralogistics), பேக்கேஜிங், குளிர்பதன சேமிப்பு (Cold Storage), போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் கிடங்கு தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 120-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில், 8,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர். முன்னணி தொழில்நுட்ப வழங்குநர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் வகையில் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இது ஒரே தளத்தில் இணைக்கும் முக்கிய பி2பி (Business-to-Business) வணிக தளமாகவும் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த கண்காட்சி, உற்பத்தித் துறை, ஆட்டோமொபைல், பொறியியல், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), மருந்துத் தொழில், இ-காமர்ஸ், சில்லறை வணிகம், உணவுப் பதப்படுத்தல், பேக்கேஜிங், குளிர்சங்கிலி (Cold Chain), கட்டுமானம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, துறைமுகங்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி (Supply Chain) உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu