கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பந்தயக் களத்தில் முன்னோடித்துவத்துடன் இருந்து வரும் டிவிஎஸ் ரேசிங் (TVS Racing), 'டிவிஎஸ் இந்தியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் 2026' (TVS India One Make Championship (OMC) 2026) -க்கான பயிற்சி மற்றும் தேர்வு முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தத் தொடக்க முயற்சி, நாட்டின் அடுத்த தலைமுறை பந்தய வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து பந்தய வீரர்களாக ஊக்குவிப்பதில் டிவிஎஸ் ரேசிங் நிறுவனத்திற்கு இருக்கும் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான இறுதித் தேர்வுச் சுற்று சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் (MIC) 2026 மே 15 முதல் மே 17 வரை நடைபெற்றது.
இந்த முகாமில் பெண்கள், ஊடகவியலாளர்கள், ரூக்கி என்றழைக்கப்படும் பந்தயக் களத்திற்கு புதியவர்கள், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR310) நிபுணர்கள் எனப் பல பிரிவுகளின் கீழ் 120-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் பந்தய வீரர்களை உருவாக்குவதில் முன்னனித் தளமாக விளங்கும் 'டிவிஎஸ் இந்தியா ஒன் மேக் சாம்பியன்ஷிப்' (TVS India One Make Championship), தொழில்முறை பந்தயக் களத்தின் அனுபவத்தையும் முறையான பயிற்சியையும் ஒருசேர வழங்குகிறது. இது நாட்டின் அடிமட்ட மோட்டார்ஸ்போர்ட் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, ஆர்வமுள்ள வீரர்களுக்குப் பந்தயக் களத்தை எளிதில் எட்டக்கூடிய ஒன்றாகவும் மாற்றுகிறது. டிவிஎஸ் ரேசிங் நிறுவனத்தின் 'ட்ராக் டூ ரோட்' (Track to Road - பந்தயக் களத்திலிருந்து சாலைக்கு) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவான 'டிவிஎஸ் அபாச்சி', பந்தயக் களத்தால் ஈர்க்கப்பட்ட தனது செயல்திறன் பொறியியலின் (performance engineering) 20 ஆண்டுகளைக் கொண்டாடுவதால் இந்த 2026 சீசன் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பந்தயக் களத்தில் இருந்து பெறப்படும் அனுபவங்கள், மோட்டார் சைக்கிள்களின் மேம்பாட்டிற்கு மட்டுமன்றி, தொழில்முறை மோட்டார்ஸ்போர்ட் போட்டிகளுக்கு வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கும் தயார்படுத்துவதற்கும் தொடர்ந்து வழிகாட்டுகின்றன.
டிவிஎஸ் ரேசிங் நிபுணர்களால் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்ட முறையான பயிற்சி மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளுக்குப் பங்கேற்பாளர்கள் உட்படுத்தப்பட்டனர். இதில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் பந்தய ஒழுங்குமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவர்களின் வாகனம் ஓட்டும் திறன், சீரான வேகம், பந்தயப் பாதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பிசினஸ் பிரிவின் தலைவர் திரு. விமல் சும்ப்ளி (Vimal Sumbly, Head Business - Premium, TVS Motor Company) கூறுகையில், "டிவிஎஸ் இந்தியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் எப்போதுமே ஒரு முறையான மற்றும் தொழில்முறை பந்தயக் கட்டமைப்பின் மூலம் சிறந்த பந்தய வீரர்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. புதியவர்கள் மற்றும் இளம் திறமையாளர்கள் முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் அனுபவம் வாய்ந்த பந்தய வீரர்கள் வரை, அவர்களின் பந்தயப் பயணத்தின் பல்வேறு கட்டங்களில் அவர்களை அடையாளம் கண்டு, தேவையான பயிற்சிகளைப் அளித்து, மேம்படுத்துகிறோம். 2026-ம் ஆண்டிற்கான பயிற்சி மற்றும் தேர்வு முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, மோட்டார்ஸ்போர்ட்டை அனைவருக்கும் எளிதாக்குவதிலும், பல்வேறு பிரிவுகளில் அடுத்த தலைமுறை இந்திய பந்தய வீரர்களை உருவாக்குவதிலும் நாங்கள் காட்டிவரும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
நிபுணர்களின் வழிகாட்டுதல், பந்தய உத்திகளின் மேம்பாடு மற்றும் போட்டி நிறைந்த பந்தயக் கள அனுபவங்களின் மூலம், வீரர்கள் தங்களின் பந்தயத் திறனைப் படிப்படியாக வளர்த்துக்கொள்ளவும், போட்டித் தளங்களைப் புரிந்துகொண்டு மோட்டார்ஸ்போர்ட்டின் அடுத்தடுத்த உயரிய நிலைகளுக்கு முன்னேறவும் டிவிஎஸ் ரேசிங் தொடர்ந்து ஒரு முறையான பாதையை வழங்கி வருகிறது. இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்டை அனைவருக்கும் பொதுவானதாக்குவதிலும், நாட்டில் ஒரு வலுவான, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பந்தயக் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகித்துள்ளது," என்றார்.
1994-ல் டிவிஎஸ் இந்தியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆர்வமுள்ள பந்தய வீரர்களுக்கு ஒரு முறையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பந்தயத் தளத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட் உலகை வடிவமைப்பதில் டிவிஎஸ் ரேசிங் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், இந்த சாம்பியன்ஷிப் போட்டி 4,000-க்கும் மேற்பட்ட பந்தய வீரர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு, பந்தயக்களத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் மற்றும் தொழில்முறை பந்தயக் கள அனுபவம் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் மிக வெற்றிகரமான பந்தயவீரர் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
’Factory Racing Team’ என்பது ஒரு மோட்டார் சைக்கிள், கார் உற்பத்தி நிறுவனங்களே நேரடியாக நிதியுதவி அளித்து, ஒரு அணியை உருவாக்கி, அவர்களுடைய தொழில்நுட்பத்துடன் நடத்தும் இருசக்கர அல்லது நான்குசக்கர ரேஸ் அணியாகும். அந்த வகையில், இந்தியாவின் முதல் ஃபேக்டரி ரேசிங் டீம் (Factory Racing Team) என்ற பெருமையுடன் 1982-ல் தொடங்கப்பட்ட டிவிஎஸ் ரேசிங், ரோட் ரேசிங் (road racing), ரேலியிங் (rallying) மற்றும் சூப்பர்கிராஸ் (supercross) ஆகிய பந்தய வடிவங்களில் பல பட்டங்களை வென்று, நாட்டின் மோட்டார்ஸ்போர்ட் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது. 1994 முதல் பெற்றுள்ள பல ஆண்டு கால பந்தய அனுபவத்தின் மூலம், டிவிஎஸ் இந்தியா OMC நாட்டிலேயே மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட வீரர் மேம்பாட்டுக் கட்டமைப்புகளில் ஒன்றை நிறுவியுள்ளது. இது ரூக்கி, பெண்கள், ஊடகம், எலக்ட்ரிக் மற்றும் எக்ஸ்பர்ட் ஆகிய பிரிவுகளில் ஆரம்பக்கட்ட பயிற்சியிலிருந்து தொழில்முறை பந்தயப் போட்டிக்கு மாறுவதற்கான எளிய வழியை வழங்குகிறது. இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (INMRC) டிவிஎஸ் ரேசிங் தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகளும், அடுத்தடுத்து வென்ற உற்பத்தியாளர் மற்றும் குழு சாம்பியன்ஷிப் பட்டங்களும், உலகத்தரம் வாய்ந்த பந்தயத் திறமைகளை உருவாக்குவதில் அதன் முதன்மையான இடத்தை மேலும் எடுத்துக்காட்டுகின்றன.
பல்வேறு பிராந்தியங்களில் இருந்து வளர்ந்து வரும் பந்தய வீரர்களின் திறமைகளைக் கண்டறிவது, பெண்கள் மற்றும் புதிய தலைமுறை வீரர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது, மற்றும் டிவிஎஸ் ரேசிங் நிபுணர்களின் முறையான பயிற்சி மற்றும் தொழில்முறை வழிகாட்டுதலின் மூலம் இந்தியாவின் அடிமட்ட மோட்டார்ஸ்போர்ட் கட்டமைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றில் இந்தத் தொடக்க முயற்சி தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. பந்தயப் பிரியர்களுடன் ஆழமான உறவை ஏற்படுத்துவதிலும், நாட்டில் வலுவான பந்தயக் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் இந்தத் தளம் முக்கியப் பங்கு வகிப்பதோடு, வாகனங்களின் செயல்திறனை விரும்புவோர் மத்தியில் பிராண்ட் மீதான ஈர்ப்பையும் வலுப்படுத்துகிறது.

0 கருத்துகள்