தமிழ்நாட்டில் நிலவும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மத்திய, மாநில அரசுகள் இவ்விசயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் க.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்த பின்னரும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த தட்டுப்பாட்டால் குறிப்பாக கீழ்க்கண்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் டீ கடைகள் மற்றும் சிறு உணவு தயாரிப்பு நிலையங்கள், இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பு தொழில்கள்ம் கேட்டரிங் மற்றும் திருமண உணவு தயாரிப்பு சேவைகள், வீட்டு அடிப்படையிலான பெண்கள் சுயதொழில் முயற்சிகள், இந்த தொழில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் நேரடியாக வாழ்வாதாரத்தை நம்பியுள்ளனர். கேஸ் சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் பல இடங்களில் உற்பத்தி நின்று போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் நாட்களில் இந்த தட்டுப்பாடு நீடித்தால், சிறு தொழில்கள் மட்டுமல்லாமல் உணவு விநியோகத் துறையும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.
எனவே, மத்திய அரசு உடனடியாக எல்.பி.ஜி விநியோகத்தை அதிகரித்து தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும். தமிழ்நாடு மாநில அரசு மாவட்ட அளவில் கண்காணிப்பு செய்து, தேவையான அளவு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கும் தொழில்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் தொடர்புடைய இந்த பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு க.திருமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்