ரூ.1 கோடி கல்வி உதவித்தொகைக்கான வெற்றியாளர்களை அறிவித்தது, ஆர்ஆர் கேபிள்

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக்கல் வயர் மற்றும் கேபிள் உற்பத்தி நிறுவனமான ஆர்ஆர் கேபிள், திருச்சியில் தனது 'கேபிள் ஸ்டார் ஸ்காலர்ஷிப் திட்டம் 2025' வெற்றியாளர்களைப் பெருமையுடன் அறிவித்தது. 

இந்தத் திட்டம், இந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற எலக்ட்ரீஷியன்களின் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது. கல்வி மற்றும் அதிகாரமிக்க இந்தியாவை உருவாக்க ஆர்ஆர் கேபிள், மாணவர்களின் மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ரூ.1 கோடிக்கும் மேல் ஒதுக்கி வருகிறது. இந்த திட்டம் துவங்கி இது வரை 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.4 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த மாணவர்கள், தங்கள் மேல்நிலைக் கல்விக்கான நிதி உதவியைப் பெற்றது மட்டுமின்றி, தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான முக்கிய அடியையும் எடுத்து வைத்துள்ளனர். இந்த ஆண்டு வெற்றியாளர்களுடன் சேர்த்து, கடந்த 'கேபிள் ஸ்டார் ஸ்காலர்ஷிப் சீசன் 2'-ல் சிறந்து விளங்கிய மாணவர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் மடிக்கணினிகள்  பரிசாக வழங்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் கேபிள் ஸ்டார் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,000 வெற்றியாளர்களில், திருச்சியில் மட்டும் 72 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருச்சி ஓட்டல் ஷான்சில்  நடைபெற்ற சிறப்பு விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 'கேபிள் தோஸ்த்' என்று அன்புடன் அழைக்கப்படும் எலக்ட்ரீஷியன்களின் குழந்தைகளின் உயர்கல்வி கனவுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டதிலிருந்து, தகுதியான மாணவர்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.

4வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது, எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வருபவர்களின் குடும்பத்தை உயர்த்துவதையும், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆர்ஆர் கேபிள் நிறுவனத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது.  பணம் என்பது லட்சியத்திற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து, புதிய கல்விப் பாதைகளை இது திறக்கிறது. கடந்த காலங்களில் உதவித்தொகை பெற்ற பல மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி, இன்று நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணிக்கின்றனர். அவர்களின் வெற்றிக்கதைகளுக்கு இந்தத் திட்டம் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தை உருவாக்கிய, ஆர்ஆர் கேபிள் இயக்குனர் கீர்த்தி கப்ரா இது குறித்து கூறுகையில், "எங்களைப் பொறுத்தவரை, எங்கள் 'கேபிள் தோஸ்த்' அதாவது எலக்ட்ரீஷியன்கள் வெறும் வணிக கூட்டாளிகள் மட்டுமல்ல, அவர்கள் எங்கள் பயணத்திற்கான அடித்தளம் ஆவார்கள். இந்த ஸ்காலர்ஷிப் மூலம் நாங்கள் அவர்கள் குடும்பத்திற்கு நிதி  உதவியை மட்டும் வழங்கவில்லை; தலைமுறைகளை மாற்றக்கூடிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறோம். பெரிய கனவு காணும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். எந்த ஒரு கனவும் சூழ்நிலை காரணமாக தடைபடக்கூடாது என்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது. இந்த இளம் சாதனையாளர்கள் தங்கள் எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கையில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

விருதுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர். இந்த முயற்சியின் மூலம், இளம் சாதனையாளர்கள் தங்கள் படிப்பைத் தொடரவும், தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தவும் ஆர்ஆர் கேபிள் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு சிறந்த, படித்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஆர்ஆர் கேபிள் முன்னெடுக்கும் ஒரு முக்கிய முயற்சியாக 'கேபிள் ஸ்டார் ஸ்காலர்ஷிப்' திட்டம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu