தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளர் நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முழுமையாக விசாரித்து உண்மை நிலையை வெளிப்படுத்த விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அவர்களுக்கு, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தென்காசி மாவட்டத்தில் நியாய விலைக் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டு இடைத்தரகர்கள் மூலம் பணியிடங்கள் நிரப்பப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதுதொடர்பாக இன்று காலை முதலே பல்வேறு தரப்புகளில் இருந்தும், குறிப்பாக திமுகவினரிடமிருந்தும் எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மேற்படி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் தகுதித் தேர்வில் 950 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்த பணியிடங்கள் நியமனம் தொடர்பாக முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 51 பணியிடங்கள் (40 விற்பனையாளர்கள், 11 கட்டுநர்கள்) என மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில் 66 பணியிடங்கள் (52 விற்பனையாளர், 14 கட்டுநர்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். மேலும், நியாவிலைக்கடை பணியிடங்களுக்காக இடைத்தரகர்கள் மூலம் ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, விரிவான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆனந்தன் அய்யாசாமி தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்