நடிகர் சங்க தேர்தல் வழக்கு தொடர்பாக சங்க நிர்வாகிகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் தாமஸ் டி.ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவரகளாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை எந்த முன்னறிவிப்பும் இன்றி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், உடனடியாக நடிகர் சங்க தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்த உத்தரவிடக் கோரியும், இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரியும், தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், 19 மார்ச் 2025 முதல் தற்போதைய நிர்வாகிகளால் எடுத்து வரும் நடவடிக்கைகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாமஸ் டி ஜேக்கப் மூலமாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் மனுதார் சார்பில் வழக்கறிஞர் தாமஸ் டி ஜேக்கப் ஆஜராகி, பொதுக்குழு தீர்மானங்கள் சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்றப் பட்டுள்ளதாக வாதாடினார். அதை விசாரித்த நீதியரசர் குமரேஷ் பாபு அவர்கள், எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு நான்கு வாரத்திற்கு வழக்கை தள்ளி வைத்துள்ளதாக வழக்கறிஞர் தாமஸ் டி. ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்