தமிழகத்தின் அமைதிக்கு உறுதுணையாக இருக்கும் திராவிட மாடல் : வழக்கறிஞர் மயிலவன்

 தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க முயலும் பா.ஜ.க.வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் தான் தமிழகத்தின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.மயிலவன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர். எஸ்.கே..மயிலவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன்  கோவிலை அனைவருக்கும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும், அனைவரும் அங்கு சென்று வழிபடலாம் என்று கூறியும், மேல் ஜாதியினர் கோவிலை புறக்கணித்து விட்டனர் என்றும் மேல் ஜாதி பெண்கள் அவதூறாக பேசியதாகவும் கோயிலை மறுபடியும் சுத்தம் செய்த பிறகுதான் கோவிலுக்குள் நுழைய முடியும் என்று கூறியதாகவும் நாளிதழ்களில் வந்த செய்திகள் மூலம் தெரிய வருகிறது. பல ஆயிரம் வருடங்களாக இந்த ஜாதி வேறுபாடுகள் இந்து மதத்தில் இருந்து வருவதாக வலைதள தரவுகள் மூலம் தெரிய வருகிறது. இது பிறப்பினாலா, தொழிலினாலா, வளர்ப்பினாலா, இல்லை குணத்தாலா என்ற விளக்கத்தை இதுவரை யாரும் தரவில்லை.

ரிக் வேதத்தில் இது பிறப்பால் என்று கூறப்பட்டுள்ளது. அதில் பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணர்களும், தோளில் இருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியவர்களும், மற்றும் பாதத்திலிருந்து சூத்திரர்களும் படைக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரம்மாவின் மகன் பிரிக்கு, அனைவரும் பிராமணர்களாகத்தான் பிறந்தார்கள்.  அவரவர்கள் தங்கள் குணத்தால் பல வர்ணங்களை அடைந்தார்கள் என்று கூறியுள்ளார். கிருஷ்ணரும் குணத்தால் ஒரு மனிதன் பிராமணன் அல்லது சத்ரியன் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் ஒரு குடும்பத்தின் தொழிலை வைத்து அவர் தீட்டானவர் என்று கூற முடியுமா? என்று மக்கள் கேட்கிறார்கள் பதில் கூற முடியவில்லை.

ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சனாதன தர்மா (இந்து மதத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் புரிந்து கொள்ளுதல்) என்ற புத்தகத்தில் மனது என்பது சுத்தமாகவும், அசுத்தமாகவும் உள்ளது. இந்த மனமானது, காமத்தினாலும் கோபத்தினாலும் அசுத்தம் ஆகிறது. இதை அகற்றினால் அது சுத்தமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உருவம் இல்லாத பரம்பொருளை நிர்குண பிரம்மன் என்றும், உருவம் உள்ள பரம்பொருளை சர்குண பிரம்மன் என்றும், மூலப்பொருளை பிரக்கிரிதி என்றும் வேதத்தில் கூறப்பட்டு உள்ளது.  நிர்குண பிரம்மன் தனது சொந்த இயல்பில் இருப்பதாகவும், அது வெளிப்படும் பொழுது பல குணங்களுடன் வெளிப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை புருஷா என்றும் பிரக்கிரிதி என்றும் பிரிக்கப்படுகிறது. இதிலிருந்து தான் மூன்று குணங்களாகிய தாமாஸ் , ராஜாஸ், மற்றும் சாத்வா குணங்கள் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு தாமாஸ் என்பது சோம்பேறித்தனம் என்றும், தூக்கம் மற்றும் செயல்படாத குணம் என்றும் கூறுகிறார்கள். ராஜாஸ் என்பது செயல்படும் குணம் என்றும், சாத்வா என்பது இரண்டு குணங்களுக்கும் நடுநிலை வகிக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு பாறாங்கல் ஒரு இடத்தில் இருக்கும் பொழுது அது அவ்விடத்திலேயே நகராமல் இருக்கிறது. ஆனால் அந்த பாறாங்கல் உடையாமல் இருப்பதற்கு பல  அணுக்களால் அது கட்டப்பட்டுள்ளதே காரணமாகும். இந்த அணுக்கள் சரியாக கட்டப்படவில்லை என்றால் பாறாங்கல் உடைந்துவிடும். இந்த உதாரணத்தில் இருந்து தாமாஸ், ராஜாஸ், மற்றும் சாத்வா குணங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படி என்றால் பிறப்பில் அனைத்து குழந்தைகளும் சுத்தமான மனதுடனும், குணத்துடனும் பிறக்கின்றனர். வளரும் பொழுது ஆசைகள் தூண்டப்படுவதால் இந்த மனதும், குணமும் மாற்றமடைகிறது. ஆகையால் ஒரே குடும்பத்தில் பல குழந்தைகள், பல குணத்துடன் இருக்க, வளர வாய்ப்புண்டு. ஆகையால் பிறப்பினால் ஒரே ஜாதி என்று கூற முடியாது. பிரிக்கு கூறியபடி வளர்ப்பினால் பல வர்ணங்களை அடைய வாய்ப்பு உண்டு என்றும் இந்த புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.

உதாரணத்திற்கு ராமாயணத்தில் ராவணன் ராஜாஸ்குணமும், கும்பகர்ணன் தாமாஸ் குணமும், குபேரன் சாத்வா குணமும் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சகோதரர்கள்தான். இதனால் கும்பகர்ணன் சூத்திரன் என்றும், குபேரன் பிராமணன் என்றும், ராவணன் சத்ரியன் என்றும் பிரிக்க முடியாது.மேலும் குபேரன் மகாலட்சுமியின் கஜானாவுக்கே பாதுகாவலராக இருக்கிறார்.  இவரிடமிருந்து வெங்கடாஜலபதியும் கடன் வாங்கி உள்ளதாக புராணத்தில் கூறப்படுகிறது. அவருக்கு சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செட்டிகுளம் என்ற இடத்தில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இங்கு விபூதி பச்சை நிறத்திலும், கையில் கட்டும் மாந்திரீக கயிறு பச்சை நிறத்திலும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தூண்கள் அமைக்கப்பட்டு குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது என்றும் அது புண்ணிய தலம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் குணத்தை வைத்து வேண்டுமானால் பிரிக்கலாம். பிறப்பை வைத்து பிரிக்க முடியாது ஏனெனில் அவர்கள் அனைவரும் அசுரர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அனுமன் தாழ்த்தப்பட்டவர் என்று கூறினாலும் எந்த கலசத்தில் இருந்து அமிர்தம் தசரதனுக்கு சென்றதோ அதே கலசத்திலிருந்து தான் அமிர்தம் அனுமனின் தாய்க்கும் சென்றதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் அனுமன் ராமனின் சகோதரன் ஆவார் தாழ்த்தப்பட்டவன் என்று கூற முடியாது. இருப்பினும் மகாபாரதத்தில் கர்ணனை வளர்ப்பினால் சூத்திரன் என்று கூறி விட்டார்கள். வியாசரும் மீனவ பெண்மணிக்கு பிறந்தவர். பரசுராமன் பிராமண குலத்தில் பிறந்தாலும் குணத்தால் சத்திரியர் ஆகிவிடுகிறார். விசுவாமித்திரர் சத்திரிய வளத்தில் பிறந்தாலும் குணத்தால் பிராமணன் ஆகி விடுகிறார். ஆகையால் சமத்துவமான குணத்தை யார் அடைகிறார்களோ அவர்கள் தான் பிராமணன் என்று புராணங்களில் இருந்து தெரிய வருகிறது. அவ்வாறு பார்க்கும் பொழுது கர்ணன் ஒரு மகானாகி விடுகிறார். அவனை சூத்திரன் என்று கூற முடியாது.

இதுதான் அடிப்படை தத்துவம். அப்படி இருக்க எப்படி பிறப்பால் ஒருவன் உயர்ந்த ஜாதி என்றும், தாழ்ந்த ஜாதி என்றும் கூற முடியும்? என்று மக்கள் கேட்கிறார்கள், பதில் கூற முடியவில்லை. ஜாதியை வைத்து கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுவது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள், பதில் கூற முடியவில்லை. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் அதை ஏற்கமாட்டோம் ஏனென்றால், இந்து மதத்தின் படி சூத்திரர்கள் கோயிலுக்குள் வந்தால் அது தீட்டாகும் என்று கூறுவது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள் பதில் கூற முடியவில்லை. இதற்குத்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறி சூத்திர மக்களை வெளியே நிற்க வைத்தார்களா? என்று மக்கள் கேட்கிறார்கள். பதில் கூற முடியவில்லை.

பாஜகவினர் மத வேற்றுமையை தூண்டிவிட்டு நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கின்றனர் என்பது பல வலைதள தரவுகள் மூலம் தெரிய வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம்  என்று கூற மறுக்கும் நபர்கள் மீது பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படுவது பல வலைதள தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. ஆளுநரும், ஜெய் ஸ்ரீ ராம்  கூற வேண்டும் என்று மாணவர்களிடையே கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தற்பொழுது இந்தியை நுழைய விட மாட்டோம் என்று மகாராஷ்டிரா மாநிலம் போர்க்களம் பூண்டுள்ளது. இதிலிருந்து தேசியக் கல்விக் கொள்கையில் இந்தியைத் திணிப்பதுதான் முக்கிய கொள்கையாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர், கடன்களை தள்ளுபடி செய்யவில்லை ரைட் ஆஃப்  தான் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். வேறு மாநிலங்களிலே சட்டமன்றத்தில் எந்த கட்சியும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அந்த கட்சியை அழித்து விடுகின்றனர்.

இவ்வாறு இருக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்பப்படி 40 இடங்களுக்கு மேல் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். ஜெயலலிதாவின் வாக்குறுதியை மீறி கூட்டணி அமைந்தால் தாமரை மலந்து இரட்டை இலை அழிந்து விடும் என்றும் மேலும் இதை மீறி அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் நிலைமை என்னவாகும் என்று அந்த கட்சியின் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஜாதி மத பிரிவினையை வைத்து தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயல்வார்களோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.

ஆகையால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியபடி எல்லோருக்கும் எல்லாமும் என்ற திராவிட மாடல்தான் தமிழ்நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu