தமிழ்நாட்டின் கலாச்சாரம், மதத்தை வைத்து தமிழக மக்களிடையே பிரிவினையை உருவாக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதா? என உயர்நீதி வழக்கறிஞர் எஸ்.கே.மயிலவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை, சமண குன்றாக அறிவிக்கவும் அந்த மலையை மீட்டு பராமரிக்க கோரியும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் என்பவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கிற்கான முக்கிய காரணம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளதும், சமண சமணத்திற்கான பல கட்டமைப்புகளை அங்கு காணப்படுவதும், கோயிலுக்கு அருகில் சமணத் துறவிகளுக்குச் சொந்தமான பாறை குகைகள் உள்ளதும், இவற்றில் சமண கட்டிடக்கலை காணப்படுகிறது என்பதே ஆகும்.
இம்மலையில் அடிவாரத்தில் முருகன் கோயிலும், நடுவில் மகாவீரரும், உச்சியில் மசூதியுடன் இணைந்து தர்காவும் அமைந்துள்ளது. இதில் எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள் அமைதியான முறையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். முருகனை வணங்கி விட்டு மக்கள் தர்க்காவிற்கும் சென்று அங்கு மந்தரித்து கயிறு வாங்கி கட்டிக் கொள்ளும் வழக்கம் இன்றும் நடைமுறையில் தொடர்கிறது. எம்மதமும் சம்மதம் என்று ஏற்றுக்கொண்டு எல்லோரும் ஒன்றிணைந்து உழைத்து சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற இடம் தமிழ்நாடு. இதுதான் தமிழ் மக்களின் கலாச்சாரம். இந்த நிம்மதியை குலைப்பதற்கு சில அமைப்புகள் தீவிரமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் மற்றொரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் எங்களுக்கு ஊர்வலம் செல்ல அனுமதி தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு தமிழ்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் அனைத்து மதத்தினரின் நிம்மதியை காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. வடநாட்டில் பாபர் மசூதியை 1992 ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடித்த பிறகு அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்ற மூலம் உத்தரவு பெற்று அங்கு கோயில் கட்டப்பட்டது. இதையே பாஜகவினர் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் நாடு முழுவதும் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வடநாட்டில் செயல்படுவது போல் இங்கும் செயல்படுகின்றார்கள். இது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல் உள்ளது. இதனால் இவர்கள் முழங்கும் இந்துத்துவாவே பாதிக்கப்படும் என்று தெரியாமல் செயல்பட்டு வருகின்றனர். இறுதியில் இந்து மக்களின் வழிபாட்டிற்கு முரண்பாடாக இவர்களின் செயல்கள் சென்றடையும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
ஏனெனில் வலைதளங்களில் கிடைக்கும் தரவுகள்படியும், பழைய நூல்களின் மூலமாகவும், சங்க இலக்கியங்கள் மூலமாகவும், அதை ஆராய்ந்து பார்க்கும் பொழுது பல்வேறு சமணக் கோயில்களும் புத்த கோயில்களும் பிராமணர்களால் இந்து கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு பின்வரும் கோவில்கள் ஒரு காலத்தில் சமணர் மற்றும் பௌத்தர்களின் கோவிலாக இருந்தன: திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவில், கிராங்கனூரில் உள்ள குரும்ப பகவதி கோவில் மற்றும் திருச்சூருக்கு அருகிலுள்ள பருவசேரியில் உள்ள துர்க்கை கோவில்.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியை நோக்கிய தக்த் இ சுலைமான் மலையின் உச்சியில் உள்ள பாஸ் பஹார் கோவில் இது சங்கராச்சாரியார் கோயில் என்று மறுபெயரிடப்பட்டது. திருப்பதியின் புத்த கட்டம் பத்மபாணியின் உருவமாக இருந்தது, பத்மா (தாமரை) இப்போது ஒரு கவேஹத்தால் (உறை) மூடப்பட்டிருக்கிறது, அதே நேரத்தில் அந்த உருவம் ஸ்ரீனிவாசன் என்ற பெயரால் கடந்து செல்கிறது. திருப்பதி, ஐஹோலே, உண்டவல்லி, எல்லோரா, வங்காளம், பூரி ஜெகநாதர், பதரிநாத், மதுரா, அயோத்தி, சிருங்கேரி, போதிகயா, சரநாத், டெல்லி, நாலந்தா, குடிமல்லம், நாகார்ஜுனகொண்டா, ஸ்ரீசைலம் மற்றும் சபரிமலை, திருவாரூர், யானைமலை ஆகிய இடங்களில் உள்ள முக்கியமான கோவில்கள், புத்த மத மையங்களின் பிராமணர்களின் அபகரிப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். இதேபோன்று பல்வேறு கோயில்கள் இந்து கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. புத்த மதத்தில் உள்ளவர்களும் சமண மதத்தில் உள்ளவர்களும் எங்கள் மத கோயில்களை மீட்டு எங்களுக்கே மீண்டும் தர வேண்டும் என்று கேட்டால் பல்வேறு குழப்பங்களும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். இச்செயல்கள் மக்களின் ஒற்றுமையை, மதத்தை வைத்து சீர்குலைக்க ஒரு காரணமாக அமையும் என்று மக்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. தைப்பூசம் அன்று இந்த அறுபடை வீடுகளிலும் மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் முதல் படைவீடு (அமர்ந்த இடம்), திருச்செந்தூர் இரண்டாவது படை வீடு (வென்ற இடம்), பழனி மூன்றாம் படை வீடு (நின்ற இடம்), சுவாமிமலை நான்காம் படை வீடு (உபதேசித்த இடம்), திருத்தணி ஐந்தாம் படை வீடு (வள்ளியை மணந்த இடம்) பழமுதிர்ச்சோலை ஆறாம் படை வீடு (அருள் புரியும் இடம்) என்று ஆறுமுகத்திற்கு அறுபடை வீடுகளை தமிழ் மக்கள் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இப்பொழுது பாஜக சங்பரிவார் அமைப்புகளின் மத வெறியால் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்று மக்கள் கருதுகிறார்கள்.
ஏனென்றால், முதல் படைவீடு திருப்பரங்குன்றத்தை சமணமலை என்று அறிவிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் படை வீடு பண்டாரங்களால் வணங்கி பூஜை செய்த இடத்தை பிராமணர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு கோயில் மீதும் வழக்கு தொடரப்பட்டால் மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று மக்களிடம் ஐயம் ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலச் சட்டத்தை 1991 ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. அதன்படி 15.08.1947 இல் வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தின் வழிபாட்டின் கீழ் இருந்ததோ அதை யாரும் மாற்ற முயற்சி செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழிபாட்டுத் தலங்களை மாற்றக்கூடிய எந்த ஒரு வழக்குகளும் நீதிமன்றத்தில் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்க சங்பரிவார் இந்துத்துவ அமைப்புகள் நாட்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் செயல்படுவது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள் பதில் கூற முடியவில்லை. ராமாயணத்திலேயே ராமர் இலக்குமனர் மற்றும் சீதை ஆகியோர் மாமிசம் உண்டார்கள் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதாக அதை மொழி பெயர்த்த, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை உட்குழுவில் இடம் பெற்றிருந்த பிபேக் திப்ராய் கூறியுள்ளார். இவ்வாறே சிவபெருமானுக்கும் கண்ணப்பநாயனாரால் மாமிசம் படைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில் " 233.குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி - உதிரத்தோடே பிசைந்த ய வெள்ளரிசியை,
234. சில் பலி செய்து-சிறுபலியாக இட்டு, " என்றும், மேலும் பல சங்க இலக்கியங்களில் தமிழ் கடவுள் முருகனுக்கும் அசைவம் படைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்து கடவுள்களை சைவம் உண்ணும் கடவுளாக மாற்றம் செய்ய சில இந்துத்துவ அமைப்புகள் முயற்சி செய்வது நம் கலாச்சாரத்திற்கு புறம்பானது என்று மக்கள் கருதுகிறார்கள்.மக்களின் பழங்கால வழிபாட்டு பழக்கவழக்கங்களை எப்படி தடுக்கலாம், மாற்றலாம் என்று மக்கள் கேட்கிறார்கள் பதில்கூற முடியவில்லை.
தென்னிந்தியாவில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகாவில் இந்து ஒற்றுமையை குலைப்பதற்கு பாஜகவினர் முயற்சி செய்தார்கள். தற்பொழுது தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
ஏனெனில் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. அன்று கண்ணதாசன் எழுதிய "மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறி விட்டான்" என்ற பாடலும், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமூலரின் வாக்கும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கலியன் பூங்குன்றனாரின் வாக்கும், அறிஞர் அண்ணா கூறிய "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு " என்ற வாக்கும் , "நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்" என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாக்கும், "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்ற பாரதியாரின் வாக்கும், "எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் " என்ற தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தத்துவத்தையும் பின்பற்றி அமைதியாக அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுதான் தமிழ் நாட்டின் கலாச்சாரம். மதத்தை வைத்து மக்களிடைய பிரிவினைய உருவாக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இச் செயல்களை செய்வது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்