செண்பகவல்லி அணை சீரமைக்க தமிழக அரசுக்கு வழிகாட்டுங்கள்! ஆளுனருக்கு ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை

50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள செண்பகவல்லி அணை சீரமைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடும்படி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்க்கை முறையை பாதிக்கின்ற, 50 ஆண்டுகளாக நிலவும் பிரச்சினையான சேதமடைந்த செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைத்து, புதுப்பிப்பது தொடர்பாக  உங்களது தயவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

செண்பகவல்லி வாய்க்கால், கேரளா / தமிழ்நாடு எல்லைக்கு அருகே, பெரியாறு நீர்ப்பாசன பகுதியில் அமைந்துள்ள இரண்டு காட்டாறு (புளியன்பட்டி தோடு & சொக்கன்பட்டி தோடு) சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பணையாகும். இந்த அணைக்கட்டு, சிவகிரி வட்டத்தில் உள்ள ராசிங்கபேரி மற்றும் குலசேகரப்பேரி குளங்களில் இருந்து நீரேற்ற வழியை மாற்றி கண்யாமடகு வாய்க்கால் மற்ற ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த அணைக்கட்டு முதலில் 1733 ஆம் ஆண்டு சிவகிரி ஜமீன்தார் அவர்களால் திருவாங்கூர் மற்றும் கொச்சின் சமஸ்தானங்களின் அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், வெம்பக்கோட்டை, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் 12,000க்கும் அதிகான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கிய முக்கிய ஆதாரமாக இருந்தது.

இந்நிலையில் 1959 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் வாய்க்காலில் ஏற்பட்ட சிறிய பாதிப்புகளை தமிழ்நாடு பொது வேலைத் துறை சரிசெய்தது. அதனைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டில் மீண்டும் அணைக்கட்டு மற்றும் நீரோட்ட பாதை சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதுக்கப்பட்டனர். பின்னர், 1986 ஆம் ஆண்டில் அணைப்பகுதி சீரமைப்பு தொடர்பாக கேரள அரசுடன் தமிழ்நாடு அரசு கலந்தாலோசித்தது. சீரமைப்பு வேலைக்கான செலவினத்திற்காக மதிப்பிடப்பட்ட தொகையில் பாதி தொகையான ரூ. 5 லட்சத்து 50 ஆயிரத்தை தமிழ்நாடு அரசு கேரள அரசிடம் கொடுத்தது. முன்பணத்தைப் பெற்றுக் கொண்ட கேரள அரசு, எந்த்வொரு சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மேலும், 2006ஆம் ஆண்டு, அந்த முன்பணத்தொகையை தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு திருப்பி அனுப்பி விட்டது.

இந்த விவகாரம் தற்போது, காவேரி நிர்வாக தீர்ப்பாயத்தில் (சிடிசி) 2006 முதல் நிலுவையில் உள்ளது. ஏனெனில் கேரள அரசு திருத்தப்பணிகளை செய்ய மறுத்ததையும், அதனை மறுபரிசீலனை செய்ய மறுத்ததையும் 20.07.2006 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 18க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், எந்த தீர்வும் இப்போது வரை காணப்படவில்லை. அரசுகளுக்கு இடையேயான கலந்துரையாடல் அல்லது காவேரி நிர்வாக தீர்ப்பாயம் வழியாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

எனவே, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு வழிகாட்டி, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவும்.

உங்களது நேரத்திற்கும், கருணைமிக்க பார்வைக்கும் நன்றி!

இவ்வாறு திரு.ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை மனுவுடன், 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவின் நகல், கேரள அரசின் நீர்வளத்துறையின் பதில் கடித நகல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில் கடிதத்தின் நகல், அணைக்கட்டுப் பகுதி மற்றும் கன்யா மதகு கால்வாய் அட்டவணைப் படம் உள்ளிட்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu