தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு


தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். 

சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர் ஜான் பாண்டியன், நேற்று காலை தென்காசிக்கு வந்தார். பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி வந்த அவருக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வேட்பாளர் ஜான் பாண்டியன் கூறியதாவது:-

இந்திய நாட்டின் பிரதமர், நான், மக்கள் என அனைவரும் தாமரையே, தாமரை இல்லையெனில் நாடே இல்லை. நிச்சயமாக தாமரை மலரும்.  தென்காசியில் வேளாண் வாய்ப்புகளை அதிகரித்தல், ஐடி பார்க் அமைத்தல் மற்றும் குற்றாலம் சுற்றுலா தலத்தை மேம்படுத்தி உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவது, பூக்கள் மற்றும் எலுமிச்சை விளையும் இடங்கள் அதிகமாக உள்ளதால் நறுமண தயாரிப்பு தொழிற்சாலை, குளிர் பதனக் கிடங்கு அமைத்தல் என பல திட்டங்கள் உள்ளன. மேலும், மோடியின் திட்டங்கள் பலவற்றையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். மோடியின் திட்டங்கள் அனைத்தையும் கூறி பிரச்சாரம் செய்யவுள்ளோம்” என்றார். 

அவர் மேலும் கூறுகையில், “இந்தப்பகுதியில் இருந்த எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் மக்களுக்காக எந்த ஒரு தொண்டும் செய்யவில்லை. நான் மக்களுக்கு பணி செய்ய வந்துள்ளேன். நான் முதல் முறையாக பாராளுமன்ற வேட்பாளராக நிற்கிறேன். எனக்கு தாமரையில் வாக்களிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்காக பாராளுமன்றத்தில் எதையும் துணிச்சலாக பேசி, பாரதப் பிரதமர் மோடியிடமிருந்து அனைத்தையும் வாங்கி தருவேன்.  இதுவரை மக்களுக்கு கிடைக்காதவற்றை அவர்களுக்கு வழங்கி தொண்டு செய்வேன்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu