5 மாநில ஜவுளித்துறை புதுமைகளை ஒன்றிணைக்கும் பாரத் டெக்ஸ் 2024

பாரத் டெக்ஸ் 2024, இந்தியாவின் பிரீமியர் உலக ஜவுளி நிகழ்வு ஆகும். குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கைத்தறி மற்றும் கைவினைப் பாரம்பரியத்தின் மாபெரும் சங்கமத்தைக் காண முடியும். ஐந்து இந்திய மாநிலங்கள் மிகச் சிறந்த கலைப்படைப்புகளையும், கைத்தறி நுட்பங்களையும், தனித்துவமான ஜவுளித்துறை புதுமைப்படைப்புகளையும் ஒன்றிணைத்து வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.

உத்தரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் ‘பார்ட்னர்களாக’ கலந்து கொள்கின்றன. குஜராத், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசத்தை ‘ஆதரிக்கும் பார்ட்னர் மாநிலங்களாக’ பாரத் டெக்ஸ் 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்கள் பிரீமியர் குளோபல் ஜவுளி நிகழ்வில் மாநில அரங்குகளை அமைக்கும். மத்தியப் பிரதேசத்தின் பாரம்பரியச் சின்னமான பாடிக் பிரிண்டிங், ஹேண்ட்-பிளாக் பிரிண்டிங், சாந்தேரி மற்றும் மகேஸ்வரி சில்க், குஜராத்தின் பந்தனி, படோலா பட்டு, ஹேண்ட் பிரிண்டிங், உத்தரப் பிரதேசத்தின் சிக்கன்காரி, ஜரி-சர்தோசி, மகாராஷ்டிராவின் பைதானி சேலை, வார்லி ஆர்ட், ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சத், ஆந்திரப் பிரதேச ஆடம்பரமான கையால் நெய்யப்பட்ட தர்மாவரம் புடவைகள் மற்றும் நேர்த்தியான மங்களகிரி பருத்தி நெசவுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் போற்றப்படும் மாநிலங்களின் கைவினை மற்றும் கைத்தறி பாரம்பரியங்களையும் கொள்கைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் வரவிருக்கும் ஜவுளிப் பூங்காக்கள் போன்ற மாநிலங்களின் முன்னேற்ற முயற்சிகளை பாரத் டெக்ஸ் 2024 ஊக்கப்படுத்தும்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “பாரத் டெக்ஸ் 2024 இல் பார்ட்னர் மாநிலமாக மகாராஷ்டிரா பங்கேற்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சியாக நிகழ்வதோடு, தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் மிகப்பெரிய தளமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் வளர்ச்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கை மகாராஷ்டிரா வகிக்கிறது. பைத்தானி புடவையின் வளமான கலாச்சார பாரம்பரியமாக இருந்தாலும் சரி அல்லது சில ஆர்வமுள்ள தொடக்க ஸ்மார்ட் டெக்ஸ்டைல்களின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி மகாராஷ்டிராவின் பொருளாதார வடிவமைப்பில் ஜவுளி மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. மேலும் அதன் தொடர்ச்சியான வெற்றியை முன்னெடுத்துச்செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 2047ல் விக்சித் பாரதத்தை அடைவதை நோக்கி நகரும் நம் தேசத்தின் முன்னேற்றம் என்னும் பின்னலின் ஒவ்வொரு செழுமையான நூலையும் சேர்ப்பதை மகாராஷ்டிர உறுதி செய்யும் என்றார்.

மத்தியப் பிரதேசம் ஒரு ‘ஆதரவு பார்ட்னர் மாநிலமாக’ இணைந்தது குறித்து, மத்தியப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ டாக்டர் மோகன் யாதவ் கூறும்போது “மத்தியப் பிரதேசத்தின் செழிப்பு அதன் தொழில்துறை முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது. தொழில் துறைகளை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். நல்ல நிர்வாகத்தை ஊக்குவித்தல் மற்றும் பயனுள்ள அமைப்பு முறையைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் விரிவான வளர்ச்சியை அடைய மாநில அரசு உறுதிபூண்டுள்ளது” என்றார்.

குஜராத் 'ஆதரவளிக்கும் பார்ட்னர் மாநிலமாகப் பங்கேற்கிறது, குஜராத் முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ பூபேந்திர படேல் கூறும்போது, குஜராத்தைப் பொறுத்தவரை, ஜவுளி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல தொடர்ந்துவரும் ஒரு பாரம்பரியம் ஆகும். இதை நாங்கள் எங்கள் கைவினைப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகிய மந்திரங்கள் மூலம் உலகுக்கு வழங்குகிறோம். ஜவுளித் துறையின் வளர்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சியும் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சியும் அடங்கி உள்ளன. நமது பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்கள் முன்வைத்த 5F (பண்ணை முதல் இழை முதல் தொழிற்சாலை முதல் ஃபேஷன் முதல் வெளிநாடு வரை) என்பதை உணர்த்தும் ஒரு கலங்கரை விளக்கமாக நமது ஜவுளித் துறை உள்ளது. இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆடை இறக்குமதியாளர்களை ஈர்க்கும் மையமாக குஜராத் மாறியுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘மேக் ஃபார் தி வேர்ல்ட்” ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதற்கான நமது லட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், நாடு முழுவதும் இழை உற்பத்தியில் குஜராத் மாநிலம் அதிகப் பங்களிப்பை வழங்கும் மாநிலமாக உள்ளது” என்றார்.

தெலுங்கானா ஒரு 'ஆதரிக்கும் பார்ட்னர் மாநிலமாக' பங்கேற்கிறது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ அனுமுலா ரேவந்த் ரெட்டி கூறும்போது, "வரலாற்று ரீதியாக, நாகரிகத்தின் வளர்ச்சியுடன் ஜவுளித்துறை தனித்துவமான உறவைக் கொண்டுள்ளது, மேலும் இந்தியா இதில் ஒரு தனித்துவமான முறையில் தலைமை வகித்து வருகிறது. இத்தகைய சூழலில் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் வரவேற்கத்தக்க முயற்சியாகும் பாரத் டெக்ஸ் 2024. இது இந்தியாவின் தனித்துவமான ஜவுளி தயாரிப்புகளை உலகிற்குக் காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு தளமாகவும் உள்ளது. கட்வால், நாராயண்பேட், போச்சம்பள்ளி இக்கட் வகை துணிகள் மற்றும் பஞ்சாரா கலை, பித்ரி போன்ற கைவினைப்பொருட்கள் உட்பட, கைத்தறிகளின் துடிப்பான, மாறுபட்ட மற்றும் வளமான பாரம்பரியத்தை தெலுங்கானா கொண்டுள்ளது. தெலுங்கானா முன்னணி ஜவுளி உற்பத்தி மையமாகவும் உள்ளது. 5F துறைகள் அனைத்திலும் வலுவான முன்னிலையில் உள்ளது. பாரத் டெக்ஸ் 2024 உடன் இணைந்து தெலுங்கானாவின் ஜவுளி வரலாற்றை உலகம் முழுவதற்கும் காட்சிப்படுத்த ஒரு பிரத்தியேகமான தளத்தை மேம்படுத்துவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.

ஜவுளி ஆர்வத்தை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதோடு, கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தங்கள் அழியாத அடையாளத்தைப் பதித்து வரலாற்றின் ஒரு பகுதியை உருவாக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு பாரத் டெக்ஸ் 2024 இன் மையத்தில் உள்ளது. ஜவுளி அமைச்சகம் பாரத் டெக்ஸ் மெமெண்டோ டிசைன் போட்டியை அதிகாரப்பூர்வ MyGov இணையதளத்தில் நடத்துகிறது, இது பாரத் டெக்ஸ்ஸில் 'பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் இழைகள்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது. முதல் ரன்னர்-அப் கேஷ் பரிசாக INR 10,000 ஐயும், இரண்டாவது மூன்றாவது வெற்றியாளர்கள் முறையே INR 3,000 மற்றும் INR 2,000 ஐ ரொக்கப் பரிசாகவும் பெறுவார்கள். வெற்றிபெறும் வடிவமைப்பு பாரத் டெக்ஸ் 2024 இன் போது மதிப்புமிகுந்த பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (சிஐடிஐ) டெக்ஸ்டைல் சஸ்டெய்னபிலிட்டி விருதுகள் 2024 பிப்ரவரி 27, 2024 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பாரத் டெக்ஸ் நிகழ்வில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு, தொழில்துறை தலைவர்களையும், கொள்கைகளை வகுப்பவர்களையும், நிலைத்தன்மையை முன்னெடுத்துச் செல்லும் வீரர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் ஜவுளித்துறை நிலைத்தன்மையை நோக்கியும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்ட ஓர் எதிர்காலத்தை நோக்கியும் எடுத்து வைக்கும் அடிகளைக் கொண்டாடுகிறது.

ஃபார்ச்சும், லென்ஸிங், H&M, பசனா குரூப் மற்றும் ஹயோசங் கார்ப் உள்ளிட்ட முன்னணி சர்வதேச ஜவுளி நிறுவனங்களின் பங்கேற்பு, உலகளாவிய ஜவுளித் துறையில் இந்தியாவின் செல்வாக்கு விரிவடைவதை எடுத்துக்காட்டுகிறது. தொழில்துறை பங்கேற்பு தவிர, ஆஸ்திரேலியா, இத்தாலி, துருக்கி, தென் கொரியா, பங்களாதேஷ், ரஷ்யா, பெரு, எகிப்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட முக்கிய ஜவுளி மையங்களில் இருந்து அமைச்சர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளித் தொழில் துறைக்குள் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் நிலைத்தன்மையை முன்னெடுப்பதில் கணிசமான முன்னேற்றத்தை இந்த ஒத்துழைப்புகள் பிரதிபலிக்கின்றன. இந்த மெகா நிகழ்வு கிட்டத்தட்ட 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 50+ அறிசார்ந்த அமர்வுகள் நடைபெற உள்ளன. ஆடை, வீட்டு அலங்காரம், தரை விரிப்புகள், இழைகள், நூல்கள், துணிகள், அச்சுத் தொழில்நுட்பம், கார்ப்பெட்டுகள், பட்டு, கைத்தறித் துணி சார்ந்த கைவினைகள், தொழிநுட்ப ஜவுளிகள் போன்ற பலவற்றின் கவர்ச்சிகரமான கலவைகளை கலந்துகொள்ளும் நிறுவனங்கள் கண்கவரும் வண்ணம் காட்சிப்படுத்த உள்ளன

புதுமை, ஒத்துழைப்பு மற்றும் 'மேக் இன் இந்தியா' உணர்வுகளை மையத்தில் கொண்ட பாரத் டெக்ஸ் 2024 என்பது பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பண்ணையில் இருந்து ஃபைபர் முதல் ஃபேக்டரி முதல் ஃபேஷன் முதல் வெளிநாடு வரை என்ற 5F என்னும் தொலைநோக்குப் பார்வையின் உருவகமாகும். எக்ஸ்போ 40 நாடுகளில் இருந்து 3500+ காட்சியாளர்கள் மற்றும் 40,000+ பார்வையாளர்களுடன், உலக அளவில் மிகப்பெரிய ஜவுளி நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது. இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜவுளி மரபுகள் முதல் சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரையிலான முழு ஜவுளித் துறை மதிப்புச் சங்கிலியின் விரிவான கண்காட்சியாக பாரத் டெக்ஸ் 2024 இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu