தென்காசி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் செயல்பட தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

தென்காசி மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் செயல்பட தடை விதிக்கக் கோரியும் பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் எஸ்.செந்தில்குமார் முதல்வரின் முகவரித்துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் (TN/SCHOOL/TKS/P/PORTAL/12SEP23/6134680) கூறியிருப்பதாவது: 

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் அரசின் உத்தரவை மதித்து செயல்படுகின்றன. ஆனால் சில பள்ளிகள் தங்களுக்கென ஒரு சட்டத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக ஆலங்குளம், அடைக்கலப்பட்டனம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ஊர்களில் செயல்படும் பள்ளிகள் போட்டி போட்டுக் கொண்டு 10, 111 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இப்பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு மனநலனும் முக்கியம் என்பதை சில புரிந்து கொள்ளாமல் செயல் பட்டு வருகின்றன.

தினமும் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளிக்குப் புறப்படும் பிள்ளைகள் மாலையில் வீடு திரும்ப 6.45 / 7 மணி வரை ஆகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாணவர்கள் இந்த நேரத்தில் பள்ளிக்குச் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்ததும் வீட்டுப் பாடம் என்கிற வகையில் தொடர்ந்து புத்தகமும் கையுமாக இருக்க வேண்டிய சூழ்நிலை. இது படிக்க வேண்டிய வயதுதான்; கட்டாயம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் என்றாவது ஒரு நாள் அரசு விடுமுறை தினங்களில் விடுமுறை கிடைத்தால் மாணவர்கள் கூடுதலாக உறங்கி ஓய்வு எடுக்கவும், நண்பர்கள் / உறவினர்களிடம் சிரித்துப் பேசி மகிழ்ந்து புத்துணர்ச்சி பெறவும் வாய்ப்பாக அமையும். உளவியல் ரீதியாக மாணவர்கள் புத்துணர்ச்சி பெறவும், ஓய்வு எடுக்கவும் இதுபோன்று சிறு சிறு இடைவெளி தேவை. தனியார் பள்ளிகள் மீது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் நிறைய குறைபாடுகள் இருந்தாலும்... இந்த விடுமுறை விசயம் மட்டுமே மாணவர்களை நேரடியாக பாதிக்கிறது.

சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்திக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தும், குறிப்பிட்ட சில பள்ளிகள் மட்டும் செயல்பட்டன. மாணவர்கள் வழக்கம்போல காலை பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்பினார்கள். ஆலங்குளம் ராமர் கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஜீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் செயல்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் நேரில் சென்று முறையிட்டபோது, பள்ளி நிர்வாகம் விடுமுறை அளிக்க மறுத்ததோடு, மற்ற பள்ளிகள் எல்லாம் விடுமுறை விட்டால் மட்டுமே தங்களால் விடுமுறை அறிவிக்க முடியும். அடுத்த் வரக் கூடிய அரசு விடுமுறை நாட்களிலும் இதுதான் எங்களது முடிவு. நீங்கள் எங்கு போய் புகார் செய்தாலும் எங்களது முடிவில் மாற்றம் இல்லை. விடுமுறை அளிக்க இயலாது' என்று விடாப்பிடியாக தெரிவித்து விட்டது.

எனவே அடுத்து வரக்கூடிய அரசு விடுமுறை நாட்களான விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மாணவர்கள் மனநலன் கருதி தனியார் பள்ளிகள் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டுகளில் சில பள்ளிகள் காலாண்டு விடுமுறை தினத்திலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகளை நடத்தியுள்ளன. இந்த ஆண்டும் அது தொடர வாய்ப்புள்ளது. எனவே காலாண்டுத் தேர்வு விடுமுறையையும் உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். தேவைப்பட்டால் அரசு விடுமுறை நாட்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் செயல்பட தடை விதித்து பொது அறிவிப்போ அல்லது தனிச் சுற்றறிக்கையோ வெளியிட்டு தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்க அறிவுறுத்தி மாணவர்கள் நலன் காக்கும்படி வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பத்திரிகையாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், மாணவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தனியார் பள்ளிகள் விசயத்திலும் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கடந்த கோடை விடுமுறை  நாட்களில் தென்காசி மாவட்டத்தில் சில பள்ளிகள் விடுமுறை அளிக்காமல் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்தன. இது தொடர்பாக பெற்றோர்கள் சார்பாக நான் முதல்வரின் முகவரித்துறைக்கு புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அவசரம் அவசரமாக விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து முதல்வரின் முகவரிப் பக்கத்தில் நான் அளித்த புகார் மனுவிற்கு சம்பந்தப் பட்ட துறை சார்பில் பதில் அனுப்பப் பட்டது.

மாவட்ட கல்வி அதிகாரியின் நடவடிக்கை குறித்த கடிதம்

அதில், "தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளி நடைபெறக் கூடாது என்ற சுற்றறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மே மாதம் நடைபெற்ற விபரத்தினை காலதாமதமாக 07.06.2023ல் அதாவது பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ள நாளில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது", என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

கோடை விடுமுறையில் பள்ளி செயல்பட்டது என்பதற்கான ஆதாரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். அது போதாது என்றால் பள்ளியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தாலே பள்ளி செயல்பட்டது உறுதியாகும். கோடை விடுமுறையில் அரசின் உத்தரவை மீறிய பள்ளி மீது இதுவரை துறை சார்ந்த நடவடிக்கை  எதுவும் எடுக்கப் படவில்லை. எனவேதான் பள்ளி நிர்வாகம் மீண்டும் மீண்டும் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விவகாரத்தில் துரிதமாகச் செயல்பட்டு கோடை விடுமுறை நாட்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் செயல்பட்ட பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

இதே விவகாரம் தொடர்பாக காளத்திமடத்தைச் சேர்ந்த மத்திய ஆயுதப்படை காவலர் (ஓய்வு) எஸ்.விஜயகுமார் என்ற பெற்றோரும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் கூறுகையில், மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் மாலை 6 மணி வரை வகுப்புகளை நடத்துகின்றன. இதனால் மாணவர்கள் வீட்டுக்கு வந்து சேர 7 மணி வரை ஆகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் பள்ளியில் புத்தகங்களோடு இருக்கும் மாணவர்கள் வீட்டுக்கு வந்ததும் வீட்டுப்பாடம் எழுதுவது, படிப்பது என இரவு வரை புத்தகங்களோடே இருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பள்ளி வேலை நேரத்திலும் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி பள்ளிக் கல்வித் துறையைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் கிருஷ்ண ஜெயந்தி ஆலங்குளம் ஜீவா பள்ளி செயல்பட்டது தொடர்பாக அன்றையதினமே மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமும், போனிலும் புகார் செய்தேன். ஆனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப் படவில்லை. பள்ளி நிர்வாகிகளிடம் நேரில் சென்று முறையிட்டபோது, நீங்கள் எங்கு சென்று புகார் செய்தாலும் எங்ககிட்டத்தான் வரும். விடுமுறை அளிக்க முடியாது. விருப்பம் இருந்தால் உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் வேற ஸ்கூலில் சேர்த்துக் கோங்க, என்று கோபமாக பதிலளித்தார். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன், என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu