கோட்டாக் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மக்களுக்கு சேவையாற்றும் விதமாக கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் மருத்துவ முகாம்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் வரும் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் 27 முதல் ஜூன் 1-ந்தேதி வரையும்,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 2 முதல் ஜூன் 7-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள பி. புதுப்பட்டி கிராமத்தில் நடைபெறவிருக்கும் மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் வி.பி. ஜெயசீலன்  மற்றும் கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் சஞ்சய் சுந்தரம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.  

கோட்டக் லைப் நிறுவனம் தனது சமூக மேம்பாட்டு திட்டங்களை வோக்கார்ட் அறக்கட்டளை மூலம் செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்களிடையே மருத்துவ முகாம்கள் மூலம் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். அதன் ஒரு பகுதியாக சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மருத்துவ முகாம்களை இந்நிறுவனம் விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடத்துகிறது. இந்த மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களுக்கு டாக்டர்கள் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்து நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்குவார்கள்.

இது குறித்து கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாலசுப்பிரமணியன் கூறுகையில், நாங்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சியானது நாம் மக்களை நேரடியாக சந்திப்பதோடு, அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வழிகளில் ஒன்றாகும். மருத்துவ சேவையை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதன் மூலம், மக்களிடைய ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிகளை அறிந்து கொள்வதற்கும், உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெறுவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் இதுபோன்ற முகாம்கள் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu