அந்நியன் படம் பார்த்த அனைவருக்கும் அம்பி என்ற கேரக்டர் நிச்சயம் நினைவுக்கு வரும். படத்தில் அம்பி பேசுவதை நம்மில் ஒரு சிலரைத் தவிர பலரும் காமெடியாகவே நினைத்திருப்போம். ஆனால் படத்தில் சொல்லப்பட்ட கருத்தை யாரும் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பது மட்டும் நிதர்சனம். சினிமாவில் ஒரு அம்பி என்றால், நிஜ வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ நபர்கள் சட்டத்தினை மதித்து, சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சினிமாவில் காட்டும் அம்பி போல அவர்கள் அல்லல்படவில்லை. மாறாக... அவர்கள் ஒரு நேர்மையான, நிஜ கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் எல்லோருமே நிஜ கதாநாயகர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற ஆசையுடனும், ஆவலுடனும் தமிழ்365 தளத்தில் "சட்டம்" பகுதி தொடங்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லா சட்டங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த பகுதியின் நோக்கம்.
மதுரையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் கே.ஏ.திருமலையப்பன் அவர்கள், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு சட்டம் பற்றியும் எழுதுகிறார்.
அந்த வகையில், பலருக்கும் தெரிந்த, ஆனால் முழுமையாக தெரியாத "தகவல் அறியும் உரிமைச்சட்டம்" பற்றி பார்க்கலாம்.
“IGNORANTIA JURIS NON EXCUSAT” என்ற சொற்றொடருக்கு சட்டம் தெரியாது என்பது செய்த குற்றத்துக்கு மன்னிப்பாகாது என்று பொருள். எனவே சட்டங்களின் அடிபடையில் நமது கடைமையையும் உரிமையையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பெரும்பாலானவருக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தச் சட்டம் பற்றிய சிறு விளக்கத்தினை தெரிந்து கொள்வோம்.
மக்களாட்சியில் அரசு மற்றும் அதை சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் ஒளிவு மறைவு இன்றி மக்கள் அறியும் வகையில் இருக்க 1997ம் ஆண்டு தமிழக அரசு, தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தினை வெளியிட்டது. பின்னர் 2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமை சட்டம் மத்திய அரசால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக நடைமுறை படுத்தப்பட்டது.இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும்.
நாம் விரும்பும் தகவலைப் பெற விண்ணப்ப மனுவுடன் பத்து ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லையை ஒட்டி சம்பந்தப்பட்ட துறையின் பொதுத் தகவல் அதிகாரிக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். மனுவில் நம்மை பற்றிய விவரங்களும் அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் பற்றிய விவரங்களும் இடம்பெற வேண்டும். மனுக்களை நேரிலோ அல்லது பதிவுத்தபாலிலோ அனுப்பலாம். மனு அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதாரச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். வெளி நாடுகளில் வாழ்வோர் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக் கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் அதற்குண்டான முத்திரைக் கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
பொதுத் தகவல் தொடர்பு அதிகாரியிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசத்திலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும், ஒரு நபரின் உயிர்ப் பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்திலும் தகவல் தர வேண்டும். தகவல் பெறுவதற்கான கட்டணங்கள் பிரிவு 8ல் வரையறுக்கபட்டபடி இருக்கவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை தர தவறும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் இன்றி தகவலை அளிக்க வேண்டும்.
ஆனால் கேட்கப்படும் தகவல்கள் பிரிவு 9ல் வரையறுக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில் இருந்தால் தகவலை கொடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடும் உரிய உயர்நிலை அதிகாரியிடம் முடிவை பெற்ற 30 நாட்களில் செய்து கொள்ளலாம். முதல் மேல் முறையீட்டு முடிவு பெற்ற 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநில தகவல் ஆணையத்திடம் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். உரிய காரணம் இருப்பதாககக் கருதினால் 90 நாட்கள் முடிந்த பின்பும் மாநில தகவல் ஆணையம் மேல்முறையீட்டை ஏற்றுக் கொள்ளலாம். மக்கள் தாங்கள் அறிய விரும்பும் அரசு சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் மக்கள் ஆட்சியின் மகத்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
அடுத்த பகுதியில் இன்னொரு சட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- வழக்கறிஞர் கே.ஏ.திருமலையப்பன்

1 கருத்துகள்
Good information
பதிலளிநீக்குClear definition
Thanks KAT