விடுமுறை விடாமல் அரசு உத்தரவை மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு, கோடை விடுமுறை நாளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறந்து நடத்தி வருகின்றன. நீட்டிக்கப்பட்ட விடுமுறை இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இதுவரை விடுமுறை விடாமல் மாணவர்களை கோடை வெயிலில் வதைத்து எடுத்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்காசி மாவட்ட கல்வி அதிகாரிக்கு, ஆலங்குளம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் சார்பில் செந்தில்குமார் என்பவர் ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

ஆலங்குளத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்புக்கான பாடங்களை கடந்த கல்வியாண்டிலேயே (ஜனவரி 2ம்தேதி முதல்) நடத்தத் தொடங்கி விட்டார்கள். 9ம் வகுப்பு புத்தகத்திற்கான தேர்வை நடத்தாமல் 10ம் வகுப்புக்கான பாடத்தில் இருந்து தேர்வு நடத்தினார்கள். தேர்வு முடிந்து 10 நாட்கள் மட்டுமே (ஏப்ரல் 21 முதல் மே 1 வரை) விடுமுறை விடப்பட்டது. அதன்பிறகு 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வகுப்புகளை தொடங்கி விட்டார்கள். இந்த கோடை விடுமுறை முழுதும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமையும் விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு கடந்த 1ம்தேதி முதல் 3ம்தேதி வரை விடுமுறை அறிவித்தார்கள். 

தற்போது 5ம்தேதி முதல் பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ள நிலையிலும் விடுமுறை அறிவிக்காமல் 10 மற்றும் 12ம் வகுப்பு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் பள்ளியின் நிர்ப்பந்தத்தாலும், பெண்டிங் வொர்க் எனப்படும் ஸ்கூல் வொர்க் / ஹோம் வொர்க் தேங்கி விடும். மொத்தமாக எழுத வேண்டியிருக்கும் என்ற பிள்ளைகளின் கஷ்டத்தாலும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.  வெயிலின் தாக்கத்தால் உள்ளபடியே பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய்-க்கு வெயிலின் பாதிப்பு வழிவகுக்கிறது. மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் உடல் சூட்டால்தான் இந்த பிரச்சினை என்கிறர்கள். இதுபற்றி பள்ளியில் முறையிட்டும் பலனில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசின் உத்தரவை மீறி கோடை விடுமுறையில் பள்ளிகள் திறந்திருப்பது குறித்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆங்கில நாளிதழில் இன்று (09-06-2023) வெளியான செய்தி. 

மேலும் அந்த மனுவில், என்னைப் பொறுத்தவரை கோடை விடுமுறையில் பள்ளி திறப்பதே தவறு; இதில் மாணவர்களை கட்டாயம் ஷூ அணிந்து வர வேண்டும் என்று பள்ளி சொல்வது அதைவிட கஷ்டமான விசயமாக கருதுகிறேன். காலை 7 மணிக்கு அணியும் ஷாக்ஸ் மற்றும் ஷூவை மாலை 5 மணி வரை அப்படியே அணிந்திருக்க வேண்டியுள்ளது. இடையில் சில நேரம் ஷூவை மட்டும் கழற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் ஷாக்ஸை கழற்றுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் பிள்ளைகளுக்கு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. மாலையில் ஷூவைக் கழற்றும்போது கால் பாதம் சிவந்து காணப்படுகிறது. இதுபற்றி பள்ளி முதல்வரிடம் முறையிட்டால், அதற்கு அவர்கள் அளித்த பதில் வியப்பாக இருந்தது. "யூனிபார்ம் போட்டுட்டு செருப்பு போட்டால் அழகா இருக்காது. அதனால் ஷூ கட்டாயம் அணிய வேண்டும்" என்பதுதான் பள்ளி முதல்வரின் பதில். நான் ஆரோக்கியம் பற்றி பேசினால் பள்ளி நிர்வாகம் அழகு பற்றி பேசுகிறது. அதோடு நிறுத்தவில்லை... பிற்காலத்தில் அரசாங்க வேலைக்குப் போனால் நாள் முழுக்க ஷூ போட்டுத்தானே ஆக வேண்டும்; அதற்காக இப்போதே இது பயிற்சியாக இருக்கும், உங்கள் பிள்ளைக்கு அரசாங்க வேலை வேண்டாமா? என்று கேட்கிறார் பள்ளி முதல்வர். 14 வயது குழந்தையின் கால் பாதமும், 27, 28 வயதுக்கு மேற்பட்டோரின் பாதமும் ஒன்றா? என்ற கேள்விக்குப் பதில் இல்லை. (சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல்வேறு பள்ளிகளில் ஷூவுக்குப் பதிலான செருப்புகள் அணிந்து வர அனுமதி வழங்கப்படுகிறது)

இதுபோன்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய  குறைகள் பல இருந்தாலும்... பிள்ளைகளின் நட்பு வட்டத்தாலும், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இப்படித்தான் அவர்களுக்கென தனி சட்டத்தை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வருவதாலும்... சேர்த்து விட்டோம்.... இன்னும் ஓரிரு ஆண்டுகள்தானே? என்று வேறு வழியின்றி அதே பள்ளியில் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஆகவே ஐயா அவர்கள் இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்,

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (09-06-2023) மாணவர்கள் வழக்கம்போல விடுமுறை நாளில் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். 9 மணிக்கு பள்ளி தொடங்கவிருந்த நிலையில் 8.26 மணிக்கு பள்ளிக்கு விடுமுறை என்ற தகவல் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப் பட்டது. வாட்ஸ் அப் தகவலைப் பார்க்காத பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துவிட்டு, விடுமுறை அறிவிப்பைப் கேட்டதும்... முன்பே சொல்லியிருந்தால் நேரமும், அலைச்சலும் மிச்சமாகியிருக்குமே, என்று புலம்பியபடி திரும்பிச் சென்றனர். மாணவர்களோ... விடுமுறை நாளில் கிடைத்த விடுமுறையை எண்ணி மகிழ்ச்சியோடு திரும்பினர்.

கோடை விடுமுறை முடிந்து வரும் 12-06-2023 (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்துள்ளது என்று பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் எல்லாம் இந்த பள்ளியில் அனைத்து சனிக்கிழமைகளும் வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் 10, 11, 12ம் வகுப்புக்கு மட்டும் பள்ளி செயல்பட்டுள்ளது. எனவே கோடைவிடுமுறையும் கிடைக்கவில்லை; இனிமேல் தங்களது பிள்ளைகளுக்கு விடுமுறை கிடைக்காது என்று பெற்றோர்கள் வருந்துகிறார்கள்.

மேலும் கோடை விடுமுறையில் அரசின் விதிமுறைகளை மீறி பள்ளியினை திறந்து வைத்த தனியார் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளில் விதிமுறை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நம்பர் ஒன், ஆல் பாஸ் மோகத்தில் மாணவர்களை ஓய்வின்றி கஷ்டப்படுத்த்திய அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த விசயத்தில் உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பொய் சொன்ன பள்ளி நிர்வாகிகள்

உண்மையைப் பேசு என்று போதிக்க வேண்டிய கல்வி நிறுவனம், கல்வித்துறை அதிகாரிகளிடம் பொய் பேசிய கூத்தும் நடந்துள்ளது. கோடை விடுமுறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே மாவட்ட கல்வி அதிகாரிக்கு பெற்றோர் சார்பில் புகார்கள் சென்றுள்ளன. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது... எங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு வகுப்புகள் எடுக்கப்படவில்லை; அட்மிஷனுக்காக மட்டுமே பள்ளியைத் திறந்து வைத்துள்ளோம் என்று பள்ளி நிர்வாகிகள் பொய் சொல்லியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிமேல் வரும் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் நேரில் பள்ளிக்கே சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu