பாதுகாப்பான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு என்பிசிஐ வழங்கும் 5 முக்கியப் பாதுகாப்பு வழிமுறைகள்


பண்டிகைக் காலம் என்பது கொண்டாட்டங்கள், பரிசுப் பரிமாற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் ஷாப்பிங் நடவடிக்கைகளுக்கான காலமாகும். ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைத் தளங்கள் என இரண்டிலும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்புத் தள்ளுபடிகள், குறிப்பிட்ட காலத்திற்கான சலுகைகள் மற்றும் கேஷ்பேக் (பணத் திரும்பப்பெறுதல்) திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இத்தகைய சலுகைகள், நுகர்வோர் விரைவாகப் பொருட்களை வாங்கத் தூண்டுகின்றன. இந்தப் பண்டிகைக் கால அவசரத்தில், நம்ப முடியாத அளவுக்கு அதிகமான சலுகைகளைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில், பலரும் போதிய சிந்தனையின்றி அவசர முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.

 இதுபோன்ற நுகர்வோர் மனநிலையை மோசடிக் கும்பல்கள் நன்கு அறிந்துள்ளன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, உளவியல் ரீதியாக ஏமாற்றும் தந்திரங்கள் மூலம் பண மோசடிகளில் ஈடுபடுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடிகளும் புதிய வடிவங்களைப் பெற்று வரும் நிலையில், விழிப்புணர்வுடன் செயல்படுவதும், சில அடிப்படைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது. இதன் மூலம், பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களைப் பாதுகாப்பான முறையிலும் தடையற்ற வகையிலும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும்.

தள்ளுபடி விற்பனைக் காலங்களில், குறிப்பாகப் பண்டிகைச் சமயங்களில், மோசடியில் ஈடுபடுவோர் பிரபலமான இணையதளங்களைப் போன்ற போலி இணையதளங்கள் மற்றும் இணைப்புகளை உருவாக்கி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களைத் திருட முயற்சிக்கின்றனர். எனவே, இணையதள முகவரியை நீங்களே தட்டச்சு செய்து உள்ளிடுவதையோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைப் பயன்படுத்துவதையோ வழக்கமாகக் கொள்ளுங்கள்.

சில மோசடிக்காரர்கள், ஷாப்பிங் செயலி அல்லது இணையதளத்திற்கு வெளியே உள்ள யுபிஐ ஐடிகள் அல்லது பணம் செலுத்துவதற்கான இணைப்புகள் மூலம் பரிவர்த்தனை செய்யுமாறு பயனர்களைத் தூண்டுகின்றனர். இதன் மூலம், அதிகாரப்பூர்வ தளங்களில் உள்ள பாதுகாப்பு சரிபார்ப்பு நடைமுறைகளைத் தவிர்த்து, மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே, பொருட்களை வாங்குவதற்கான பணப் பரிவர்த்தனைகளைச் சம்பந்தப்பட்ட செயலி அல்லது இணையதளத்தின் அதிகாரப்பூர்வ கட்டணப் பக்கத்தின் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

பரிசுகள், கேஷ்பேக் அல்லது பண்டிகைக் காலச் சிறப்புப் பரிசுகள் வழங்குவதாகக் கூறி வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களில், பயனர்களின் ஓடிபி, வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது சிறிய தொகையைப் பதிவுக் கட்டணமாகச் செலுத்துமாறு கேட்கப்படலாம். இதுபோன்ற செய்திகளை நம்பி, உங்களது ரகசியத் தகவல்களைப் பகிரவோ அல்லது எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவோ கூடாது. எதிர்பாராத ஓடிபி கோரிக்கைகளை எச்சரிக்கை அறிகுறியாகக் கருதுங்கள்.

ஒரு சலுகை விரைவில் காலாவதியாகிவிடும் அல்லது உடனடியாகச் செயல்படாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி, மோசடிக்காரர்கள் பயனர்களிடம் அவசரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் அவசரப்படுத்தும் உத்திகளைக் கொண்டு நம்பகமான நிறுவனங்கள் ஒருபோதும் செயல்படுவதில்லை. எனவே, இத்தகைய தகவல்கள் கிடைக்கும்போது பதிலளிப்பதற்கு முன்பாக நிதானமாகச் சிந்தித்து, அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி, இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை உறுதிசெய்ய, பயனர்கள் 'நிறுத்து, சிந்தி, செயல்படு' என்ற பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றுவது அவசியம். எதிர்பாராத கோரிக்கைகள் வரும்போது உடனடியாகச் செயல்படாமல் நிதானிப்பது, கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சிந்தித்துச் சரிபார்ப்பது, அதன் பின்னர் விவேகத்துடன் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதுடன், தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களையும் திறம்படப் பாதுகாக்க முடியும். எதிர்பாராத கோரிக்கைகள் வந்தால் நிறுத்துங்கள்; தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கோ அல்லது பணம் செலுத்துவதற்கோ முன்பாக சிந்தித்துச் செயல்படுங்கள்; தகவலின் நம்பகத்தன்மையையும் அதன் மூலத்தையும் உறுதிப்படுத்திய பின்னரே செயல்படுங்கள். இந்த மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu