உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘தி ரைஸ் – எழுமின்’ அமைப்பு சார்பில் நடைபெறவுள்ள 17-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு நவம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற ரோட்ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘தி ரைஸ் – எழுமின்’ குளோபல் தலைவர் தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பர், மாநாட்டின் நோக்கம், எதிர்பார்ப்புகள் மற்றும் உலகத் தமிழர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “துபாயில் உள்ள மில்லேனியம் பிளாசா ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில், 40 நாடுகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறனாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக வாய்ப்புகள் விரிவடைந்து வரும் சூழலில், உலகத் தமிழர்களின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இம்மாநாடு முக்கியத் தளமாக அமையும்.
மாநாட்டில் பங்கேற்பவர்களின் தொழில் மற்றும் வணிகத் தேவைகளை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய நான்கு தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கெனத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநாட்டின் நிறைவில் சுமார் 300 தொழில் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களையும், தமிழர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளையும் உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதே எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம். இதனை ஆண்டு முழுவதும் செயல்படுத்தும் வகையில், மாநாட்டின் நிறைவில் துபாயில் சிறப்பு அலுவலகம் திறக்கப்பட உள்ளது. உலகத் தமிழர்களின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கான மையமாக இந்த அலுவலகம் செயல்படும்.
உற்பத்தித் துறை, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், பின்னலாடை மற்றும் வீட்டு உபயோகத் துணிகள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த மாநாடு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும். முதலீடு செய்ய விரும்புவோரையும், முதலீட்டை எதிர்பார்க்கும் தொழில்முனைவோரையும் இணைக்கும் வாய்ப்பாகவும் இது அமையும். துபாய் மற்றும் அபுதாபியை மையமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிதி, மூலதனம், பங்குச் சந்தை, தங்கச் சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதுடன், பெங்களூரு, மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பலர் பதிவு செய்துள்ளனர்.
தொழிலதிபர்களை ஒருங்கிணைப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு துறைகளில் இயங்கும் உலகத் தமிழர்களின் அமைப்புகளும் இம்மாநாட்டில் தனித்தனி மாநாடுகளை நடத்த உள்ளன. அனைத்துலகத் தமிழ் மருத்துவர் பேரவை, அனைத்துலகத் தமிழ் கணினித் துறையினர் பேரவை, அனைத்துலகத் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவை, அனைத்துலகத் தமிழ் வங்கி மற்றும் நிதி மேலாண்மையாளர்கள் பேரவை, அனைத்துலகத் தமிழ் பெண்கள் பேரமைப்பு ஆகிய அமைப்புகளின் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்கச் சந்தைகளுக்கான முக்கிய இணைப்புத் தளமாகத் துபாய் விளங்குவதால், அங்கிருந்து உலகச் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளைத் தமிழ்த் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகத் தமிழர்களின் தொழில் மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்தி, புதிய ஒப்பந்தங்களையும் நீண்டகாலக் கூட்டாண்மைகளையும் உருவாக்குவதே இந்த மாநாட்டின் இலக்கு.
தமிழர்களின் தொழில் மற்றும் வணிக வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படும் இம்மாநாட்டிற்கு, அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாகுல் ஹமீது தலைமை ஏற்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் www.tamilrise.org என்ற இணையதளத்தின் ந்மூலமாகவோ, +91 9150060032 / 33 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.”
இவ்வாறு ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.
#Business #rise #roadshow #Madurai #jagath Gaspar

0 கருத்துகள்