சங்க தேர்தல் வழக்கு: நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட மனு தள்ளுபடி

 தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட மனுவினை உயர்நீதி மன்ற நீதிபதி மரியா கிளீட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவரகளாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்தது.



இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை எந்த முன்னறிவிப்பும் இன்றி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், உடனடியாக நடிகர் சங்க தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்த உத்தரவிடக் கோரியும், இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரியும், தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், 19 மார்ச் 2025 முதல்  தற்போதைய நிர்வாகிகளால் எடுத்து வரும் நடவடிக்கைகளை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் தாமஸ் டி ஜேக்கப் மூலமாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மனுதார் சார்பில் வழக்கறிஞர் தாமஸ் டி ஜேக்கப் ஆஜராகி, பொதுக்குழு தீர்மானங்கள் சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்றப் பட்டுள்ளதாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். நடிகர் சங்கம் சார்பில் கிருஷ்ணா ரவீந்திரன் ஆஜரானார். இந்நிலையில்  தமிழ்நாடு அரசு நடிகர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலத்தை மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து 2025ல் அரசாணை வழங்கியது.  தமிழ்நாடு அரசினால் அரசாணை வழங்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் இருக்கின்ற சேகர் என்பவரின் சார்பில் வழக்கறிஞர் புகழ்காந்தி  மனு தாக்கல் செய்து வாதம் செய்தார். 

அந்த மனு விசாரணைக்கு வரும் பொழுது மேற்கண்ட மனு நிலைக்கத்தக்கதல்ல. எனவே சேகர் என்பவர் தாங்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், வழக்கை விரைந்து முடித்து நடிகர் சங்கத்திற்கு விரைவாக தேர்தல் நடத்த வேண்டுமென்றும் நடிகர் நம்பிராஜன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் தாமஸ் டி ஜேக்கப் மற்றும் டேவிட்சன் தேவாஷிஸ் ஆகியோர் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஏ.டி. மரியா கிளீட், சேகர் என்பவரால்  தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எனவே நடிகர் சங்க வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu