மதுரை தெற்கு தொகுதி வாக்காளர்களுக்கு த.வெ.க. எம்.எல்.ஏ., எம்.எம். கோபிசன் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் எளிதில் அணுகக்கூடிய பிரதிநிதியாக தொடர்ந்து செயல்படுவேன், என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொழிலாளர் நலன் அணி அமைப்பாளருமான பொறியாளர் எம்.எம்.கோபிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல. இது தொகுதி மக்களின் நம்பிக்கைக்கும், மாற்றத்திற்கான எதிர்பார்ப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும். என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் காலத்தில் பகல், இரவு பாராமல் அர்ப்பணிப்புடன் உழைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, பெண்கள் அணி, தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், குடிநீர், சாலை வசதி, வேலைவாய்ப்பு, இளைஞர் முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னுரிமையாக கொண்டு செயல்படுவேன். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் பொறுப்புணர்வுடன், மக்கள் எளிதில் அணுகக்கூடிய பிரதிநிதியாக தொடர்ந்து செயல்படுவேன், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதியின் வளர்ச்சியும் மக்கள் நலனும் தனது அரசியல் பயணத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் எம்.எம். கோபிசன் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்