மதுரை நகரில் ஜனவரி 8ம் தேதி முதல் 11ம்தேதி வரை ‘தி ரைஸ் – சங்கம் 5' மதுரை மாநாடு* நடைபெற உள்ளது. அலங்காநல்லூரில் உலகத் தமிழர் ஜல்லிக்கட்டுடன் துவங்கும் இந்த மாநாடு கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகிறது.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் 2016ம் ஆண்டு 'தி ரைஸ்' துவங்கப்பட்டது. மதுரையில் முதல் மாநாடு நடந்தது. அதன் பிறகு பல்வேறு நாடுகளில் தி ரைஸ் உலகத்தமிழர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தற்போது 16வது மாநாடாக மீண்டும் மதுரையில் தி ரைஸ் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. ‘தி ரைஸ் – சங்கம் 5 : மா மதுரை 2026’ என்ற பெயரில் நடத்தப்படும் உலகத் தமிழர் மாநாடு, 2026 ஜனவரி 8ம்தேதி முதல் 11ம்தேதி வரை மதுரையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி 8ம்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், பிரத்யேக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு தமிழரின் வீர விளையாட்டை உலகத் தமிழர்கள் முன்னிலையில் விளையாடுகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து மாலையில் சங்கம் 5 மாமதுரை மாநாட்டின் துவக்க விழா ஐடாஸ்கட்டர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் உலகின் 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கல்வியாளர்கள், மருத்தவர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து 9, 10ம் தேதிகளில் பல்வேறு தொழில் வணிக செயல்பாடுகள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. முக்கிய அம்சங்களாக வர்த்தக கண்காட்சி, வாங்குபவர் - விற்பனையாளர் நேரடி சந்திப்பு, பிட்ச் பெஸ்ட் (கருத்து முன்வைப்பு நிகழ்வு), தகவல் தொழில்நுட்ப (ஐடி) மாநாடு, மகளிர் மாநாடு, உலகத் தமிழ் மருத்துவர் மாநாடு, மனிதவள, கல்வி, பொறியியல் & உற்பத்தித் துறை மாநாடுகள், உலகளாவிய தளவாட (லாஜிஸ்டிக்ஸ்) மன்றம், வங்கி அதிகாரிகள், நிதி நிபுணர்கள் & கணக்காய்வாளர்கள் சந்திப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இதில் 2000க்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழர்களின் பொருளாதார, தொழில், அறிவு மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் முக்கிய மேடையாக இந்த மாநாடு அமைய உள்ள இம்மாநாட்டின் மையக் கருத்தாக, “தமிழ்நாட்டை உலகளாவிய தொழில், முதலீடு மற்றும் அறிவு மையமாக உருவாக்குதல்” என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், உற்பத்தி, ஐடி, உணவு பதப்படுத்தல், லாஜிஸ்டிக்ஸ், கல்வி, சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் புதிய சந்தைகள் உருவாக்கப்படவுள்ளன.
மேலும், “Made in Tamil Nadu” என்ற ஒரே அடையாளத்தின் கீழ், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை உலக சந்தைகளில் முன்னிறுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான தொழில் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, Global Tamil Village & Country Club என்ற கனவு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. இதில் தமிழர் பண்பாடு, மொழி, மருத்துவம், சுற்றுலா மற்றும் பாரம்பரிய வாழ்வியல் ஆகியவை உலகளவில் முன்னெடுக்கப்பட உள்ளன. மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி 11 அன்று அன்று, கீழடி – உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. தி ரைஸ் – சங்கம் 5 : மா மதுரை 2026’, தமிழர்களின் 70 ஆண்டுகால எதிர்காலப் பயணத்திற்கு வழிகாட்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்