தெடர்ந்து முயன்றால் தொழிலில் வெற்றி பெறலாம்: ஜோஹோ முதன்மை விஞ்ஞானி ஶ்ரீதர் வேம்பு பேச்சு

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் மற்றும் தென்காசி மாவட்ட குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா) இணைந்து நடத்திய மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் 19 மற்றும் 20ம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட வர்த்தகர்கள், ஸ்டார்ட் அப்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 10,000க்கும் அதிகமானோர் பங்கேற்று கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.

இந்த கண்காட்சியில் வங்கிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்கூடங்கள், விவசாயப் பொருட்கள், டிரோன் டெக்னாலஜி, அழகு சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன. 

முன்னதாக 19ம் தேதி காலை கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. டெம்சியா தலைவர் திரு.சி.அன்பழகன், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் திரு.ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். 

திரு.ஆனந்தன் அய்யாசாமி பேசுகையில், சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் வேலை இல்லாததுதான். புதிய தொழில் நிறுவனங்களால் மட்டும் தான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். அதனாலேயே புத்தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், வழிகாட்டும் வகையிலும் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வாய்ஸ் ஆப் தென்காசி தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது, என்றார்.

திரு. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., டெம்சியா நிறுவனர் ஆதரவாளர் திரு.எம்.ஆர்.அழகுராஜா, ஆலோசகர் திரு.எஸ்.ராமன், துணைத்தலைவர்கள் திரு.எஸ்.டி.முருகேசன், திரு.ஏ.வெங்கடேஷ்ராஜா, வாய்ஸ் ஆப் தென்காசி தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.கே.காருண்யா குணவதி, பிரிவு தலைவர்கள் திரு.டாக்டர் எஸ்.சங்கிலி விக்ரம்குமார், திரு.ஆர்.லட்சுமணன் ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர். 

நிழ்ச்சியில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு.சி.கே.குமரவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், தொழிலில் பிராண்டிங் என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே பிராண்ட்டை உருவாக்குவதற்காக முனைப்புடன் செயல்பட வேண்டும், என்றார். யெல்டி சாஃப்ட்காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் திரு.ரா.அர்ஜுனமூர்த்தி சிறப்புரையாற்றினர்.  ஜோஹோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பத்மஶ்ரீ திரு.ஶ்ரீதர் வேம்பு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப்பேருரையாற்றினார். அவர் பேசுகையில், எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் தாமதிக்காமல் வேலையைத் துவங்க வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கு சில காலம் ஆகலாம். ஆனால் தொடர்ந்து முழு வீச்சோடு இலக்குகளோடு முயன்றால் நிச்சயம் வெற்றி கிடைக்கும், என்றார். திரு. செந்தில்கணேஷ், செயலாளர் TEMSEA நன்றி கூறினார்.

இரண்டாம் நாளான 20ம்தேதி (ஞாயிற்றுக் கிழமை) முதலீட்டாளர்கள் தலைமையில் இளம் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற பிட்ச் போட்டி நடந்தது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.  மேலும் ஸ்டார்ட்அப்  டி.என். மூலமாக வந்த 40 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடனான பிரத்யேக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜோஹோ முதன்மை விஞ்ஞானி திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்கள் பங்கேற்று தனது அனுபவங்கள், வழிகாட்டல்களை இளம் தலைமுறைக்கு எடுத்துரைத்தார். அதோடு ஸ்டார்ட்அப்களின் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி நடுவராக அமர்ந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். "கிராமம் மற்றும் நகரங்களில் புதிய தொழில் நிறுவனங்களை பெரிதாக்குவது எப்படி? என்ற தலைப்பில் நடந்த இந்த கலந்துரையாடல் குறு மற்றும் சிறுதொழில் புரியும் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. 

2 நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த கண்காட்சியின்போது தொழில் முனைவோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறு தொழில் புரிவோர், ஸ்டார்ட் அப்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும்  வெற்றிபெற்ற தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து தங்கள் தொழிலுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றனர். வாய்ப்பினைப் பெறலாம். அதேப்போல, வணிகச் சிக்கலுக்கான தீர்வு, நேரடி ஆலோசனை, கலந்தாய்வுகள், புதுமைத்தொழில்கள், கிராமப்புற புத்தொழில்கள், தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu