தாய் மொழியை அழித்து இந்தியை திணிக்க வேண்டாம் என்றும், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை பின்தங்கிய மாநிலங்களாக மாற்ற முயலும் நடவடிக்கைகளை பா.ஜ.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்என்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மயிலவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.மயிலவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதற்கு நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உரையாற்றும் பொழுது மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பதற்கு காங்கிரசும் கழகமும் கட்சத்தீவை இலங்கையிடம் கொடுத்தது தான் காரணம் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் பொழுது, தொகுதி மறுவரையறைக்காக கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டால் அதில் பங்கேற்பேன் என்றும் கூறியுள்ளார். மேற்கண்ட நிகழ்வுகளை வைத்து பார்க்கும் பொழுது இதில் உள்ள உள்நோக்கம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மக்களிடம் கருத்து கேட்கும் பொழுது பாஜகவிற்கு தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் சிறிதளவும் அக்கறை இல்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் மார்ச் 1ம் தேதி முதல் கையெழுத்து பெறுவேன் என்று அண்ணாமலை கூறினார். ஆனால் தாய்மார்களிடமோ ஆசிரியர்களிடமோ பொதுமக்களிடமோ கையெழுத்து பெறவில்லை. பல சமூக வலைதள வீடியோக்களை பார்க்கும் பொழுது பாஜகவினர், குழந்தைகளிடம் பிஸ்கட் தருகிறோம் கையெழுத்து போடுங்கள் என்று கெஞ்சுவது தான் தெரிகிறது. இதை பார்த்து மக்கள் . நகைக்கின்றனர். இந்திய அரசின் கல்வி அமைச்சர் இதை பார்த்த பிறகாவது தாய் மொழிக்கு மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர், தமிழ்த்தாய்க்கு மக்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், தமிழ்நாடு, பாஜக ஆளும் பீகார் உ.பி போல அல்ல. எங்கள் தாய் மொழியை அழிக்க விடமாட்டோம் என்று புரிந்து கொண்டால் போதும் என்று மக்கள் கருதுகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கையில், இந்தி புகுத்தப்பட்டதால் எத்தனை மாநிலத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். தாய்மொழியின் மீது பற்றுள்ளதால் தான் கேரள மாநிலமும் தமிழ்நாட்டுடன் சேர்ந்து குரல் எழுப்பி உள்ளது. மராத்தியை அழிக்க முடியாது என்று உத்தவ்தாக்கரே கூறியுள்ளார். ஆந்திர முதலமைச்சர், தமிழ்நாட்டில் யாவரும் ஆங்கிலம் கற்பதால்தான் உலகெங்கும் நல்ல பதவியில் உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இவ்வாறு இருக்க சமஸ்கிருதத்தை முதல் மொழியாக அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய கல்விக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பது திட்டத்தின் பிரிவுகள் 4.17, 4.18, 22.8, 22.15 மற்றும் 22.16 மூலம் தெரிய வருகிறது. சில நூற்றாண்டுகள் பழமையான சமஸ்கிருதம் முதலிடம் வகிக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் குரு கோல்வாக்கர் கூறியதை அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் நம் நாட்டையே பாஜகவினர் பின்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை.
ஆளுநர் நெல்லையில் உரையாற்றும் பொழுது கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததினால்தான் மீனவர்கள் இலங்கை அரசாங்கம் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்களை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அதற்கும் கச்சத்தீவுதான் காரணம் என்று ஆளுநர் கூறுவாரா? ஆளுநர் குஜராத் மாநில அரசிற்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை குறை கூறவும் இல்லை. இங்கு மட்டும் கழக நல்லாட்சியை கலைப்பதற்காகவே பேசுகிறார் என்று மக்கள் கருதுகிறார்கள். இங்கும் கேரளத்திலும் மற்றும் வங்காளத்திலும் ஆளுநர்கள் நடுநிலையுடன் செயல்படாமல் பாஜகவின் பேச்சாளர்களாகவே செயல்படுவது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள் பதில் கூற முடியவில்லை.
பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் தொகுதி மறுவரையறைக்காக கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டால் அதில் பங்கேற்பேன் என்றும் கூறியுள்ளார். தொகுதி மறு வரையறை ஏன் கொண்டுவந்துள்ளார்கள்? இது எவ்வாறு தென் இந்திய மாநிலங்களை பாதிக்கும்? மறுவறையால் உ.பி. பீகார் போன்ற வடமாநிலங்களில் தொகுதி எவ்வாறு அதிகரிக்கும்? பாராளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் எவ்வாறு பாதிக்கப்படும்? என்பது பற்றி எல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டு முதல்வர் விளக்கி கூறியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிக இருக்கைகள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளதால் தொகுதி மறுவரையறை மீதான சந்தேகம் வலுக்கிறது.. இவ்வாறு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தொகுதி மறு வரையறையை அண்ணாமலை ஏன் எதிர்க்கவில்லை? என்று மக்கள் கேட்கிறார்கள். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இதை கண்டித்து இதுவரை ஒரு அறிக்கை கூட ஆளுநரோ, அண்ணாமலையோ வெளியிட்டதில்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லை என்று கூறி, பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கையை தமிழ்நாடு எதிர்ப்பதினால், இங்கு உள்ள கழக அரசை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இவ்வாறு பேசுகிறார்கள் என்று மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
11 ஆண்டுகாலம் பாஜக நாட்டை ஆளுகிறது, இதுவரை இவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதை பார்த்தால், இன்று நம் நாட்டில் ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 87.36 ரூபாயாக உள்ளது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 8080 என்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு நூறு இந்தியர்களிலும் 9 பேர் மட்டுமே முறையான நியமனம் கடிதம் மூலம் வேலையில் உள்ளனர் என்றும், இந்தியாவில் மக்களிடையே நிலவப்படும் பொருளாதார இடைவெளி பற்றியும், புளும் வென்சர்ஸ் அறிக்கை மற்றும் சிந்து பள்ளத்தாக்கு அறிக்கை 2025-ல் விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் பணக்காரர்கள் மேலும் பணக்காரராகி வருகின்றனர் மற்றவர்கள் அனைவரும் பொருளாதார நிலையில் பாதாளத்திற்கும் கீழ் தள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதே அறிக்கையில் மூன்று சதவீத குடும்பங்கள் மட்டுமே பணக்கார குடும்பங்களாக உள்ளது. 10மூ குடும்பங்கள் சிறிது அதிகாரம் பெற்ற குடும்பங்களாக உள்ளன. மீதமுள்ள 87 சதவீத குடும்பத்தில் உள்ள 205 மில்லியன் மக்கள் தாங்கள் விரும்பியதை கூட வாங்க முடியாத மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில்தான் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது..இதுதான் பாஜகவின் நல்லாட்சியா என்று மக்கள் கேட்கிறார்கள் அதற்கு அண்ணாமலையும் ஆளுநரும்தான் பதில் கூற வேண்டும்..
பாஜக ஆட்சிக்கு வந்த போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நடவடிக்கையால் இன்று வரை கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். .தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை திட்டம் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மேலும் சுமையை ஏற்படுத்தும். தொகுதி மறுவறையினால் தென் மாநிலங்களுக்கு பாராளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்படும்.
இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவுடன் எந்தக் கட்சியினர் கூட்டணி சேருவார்கள்? என்று மக்கள் வியப்புடன் உற்று நோக்குகின்றனர். தமிழ்த்தாயையும் அவமதித்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்பொழுது வெளிநடப்பு செய்த ஆளுநருக்கும் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்க முயலும் புதிய கல்விக் கொள்கையை அமலுக்கு கொண்டுவர துடிக்கும் அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க முயலும் பாஜகவிற்கும் தமிழ்நாட்டின் மீது பற்று உள்ளதா என்று மக்கள் கேட்கிறார்கள்? மேற்கண்ட பாஜகவின் பிற்போக்கு திட்டங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், தமிழ்நாட்டில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதும் அரசின் மீதும் அமலாக்கத்துறை புலனாய்வுத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளை கொண்டு சோதனை என்ற பெயரில் அவர்கள் மீது தேவையற்ற பழி சுமத்துகிறார்களோ என்று மக்கள் அச்சப்படுகிறார்கள் இதற்கு பதில் கூற முடியவில்லை. முன்னேறிய மாநிலமாக தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை பின்தங்கிய மாநிலமாக மாற்ற முயலும் மேற்கண்ட நடவடிக்கைகளை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். அவ்வாறே தாய் மொழிகளை அளித்து இந்தியை திணிக்க வேண்டாம் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சிகள் துணை போகக்கூடாது என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்