பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் "மகிழ் முற்றம்" மாணவர் குழுக்கள் தொடக்கம்

மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் "மகிழ் முற்றம்" மாணவர் குழுக்கள் தொடக்க விழா நடந்தது. 

தமிழகத்தில் அனைத்து விதமான அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைச் செயல்படுத்தும் வகையில் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் குழு அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் குழு தொடக்க விழா நடைபெற்றது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளையும் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு கலரில் கொடி உருவாக்கபபட்டிருந்தது. கண்கவர் வண்ணக் கொடிகளைக் கையில் ஏந்தி, மாணவி தலைவிகள் உற்சாகத்துடன் நடந்து வந்தனர்.

மகிழ் முற்றம் குறித்து பேசிய, தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள மாணவிகளிடம் இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும், என்றார். இந்த குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். அதிக புள்ளிகளைப் பெறும் குழுவானது அந்த மாதத்தின் வெற்றிக் குழுவாக அறிவிக்கப்பட்டு அதன் வண்ணக்கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கும் எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும், என்று உதவி தலைமை ஆசிரியர் ஜெகதா தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவிக்ளை வாழ்த்துப் பேசினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய முன்னெடுப்பு மாணவிகளிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu