சட்டம் என்ன சொல்லுது - பகுதி 2
தினமும் நாம் சாலைகளில் சிறார்கள் உரிய வாகன உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை
ஒட்டுவதைப் பார்க்கிறோம். தங்களின்
பிள்ளைகளை ஹீரோவாக பார்த்து ரசிக்கும் பெற்றோர்களின் செயல்பாடு சரியா?
இன்றையச் சூழலில் வாகன விபத்துக்கள் இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லலாம். வாகன
விபத்துக்கான காரணிகள் பலவாக இருப்பினும் போக்குவரத்து விதிமுறைகளை மதியாமை என்று
அதனை பொதுவாக குறிப்பிட்டு விடலாம். மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 3, வாகனம் ஓட்டுவதற்கான உரிமையின் அவசியத்யதினை வரையரறுக்கின்றது. அச்சட்டப்
பிரிவு 4 மேற்படி வாகனம் ஓட்டும் உரிமையின் வயதினை வரையரறுக்கின்றது.
உரிமம் இல்லாத நபர்களை வாகனத்தின் உரிமையாளரோ அல்லது அதன் காவலரோ ஒரு வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றம்
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 4ன் படி ஒருவர் மோட்டார் வாகனம் ஓட்ட
உரிமம் பெறுவதற்கான குறைந்த பட்ச வயது 18 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே
சமயம் சக்கர நெம்புகோல் இல்லாத (without
gear) வாகனகளை ஓட்டும்
உரிமம் பெறுவதற்கான குறைந்த பட்ச வயது 16 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர்
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் போதோ, அல்லது உரிய வாகனக் காப்பீடு (Vehicle Insurance) இல்லாது வாகனம் ஓட்டும்
போதோ ஏதேனும் விபத்து ஏற்பட்டால் விபத்தில் காப்பீடு பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
![]() |
| வழக்கறிஞர் கே.ஏ.திருமலையப்பன் |
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 5ன் படி மோட்டார் வாகனம் ஓட்ட உரிமம் இல்லாத நபர்களை வாகனத்தின் உரிமையாளரோ அல்லது அதன் காவலரோ ஒரு வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றம் என்று நெறிப்படுத்தியுள்ளது. அவ்வாறு அனுமததித்தால் அனுமதிப்பவருக்கு ரூ.1000 வரையில் அபராதமும் 3 மாதம் வரையில் சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். மேலும் வாகனம் ஓட்டும் நபருக்கு ரூ.500 வரையில் அபராதமும் 3 மாதம் வரையில் சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்.
ஒரு நபர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முதலில் பழகுனர்
உரிமம் பெறுவது அவசியமாகும். பழகுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர் உரிய
ஆளுகைக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தனது விருப்பம் குறித்து
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் உரிய ஆவணங்களுடனும் ,
நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடனும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும்
விண்ணப்பிக்கும் நபர் உடல் தகுதி குறித்து மருத்துவச் சான்றும் இணைக்கப்பட
வேண்டும். மேற்படி சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து அவருக்கு பழகுனர்
உரிமம் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 8ன் படி வழங்கப்படும்.
இவ்வாறு பழகுனர் உரிமம் பெற்றவர் ஏற்கனவே மோட்டார் வாகன
உரிமம் வைத்துள்ளவரின் துணையோடு பழகுனர் வாகனத்தை சாலைகளில் ஒட்டிப் பயிற்சி செய்யலாம். அவ்வாறு இயக்கப்படும்
பழகுனர் வாகனத்தின் முன்பும் பின்பும் "L"
குறியிடப்பட்டிருக்க வேண்டும். பழகுனர் உரிமம் உள்ளவர் தனியே வாகனத்தை ஒட்டக்
கூடாது. ஒரு ஓட்டுனர் உரிமம் பொதுவாக ஆறு மாதம் செல்லுபடியாகும்படி
கொடுக்கப்பட்டிருக்கும். அதன் பின் நீட்டிப்புக்கு மனு செய்யலாம்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 9ன் படி ஒருவர் ஓட்டுனர்
உரிமம் பெற மனுச் செய்யலாம். உரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகர் சோதனை
செய்யும் பொது விண்ணப்பதாரரின் வாகன இயக்கும் திறன் திருப்திகரமாக உள்ளதாக
அலுவர் எண்ணும் பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம்
வழங்கலாம்.
ஹீரோவாக சிருஷ்டிக்கப்படாமல் தங்கள் பிள்ளைகள் நிஜ ஹீரோவாகவே வலம் வர உரிய ஓட்டுனர் உரிமம் பெறுவது அவசியம் என்பதை பெற்றோர் உணர்வது அவசியமே!
அடுத்த பகுதியில் இன்னொரு சட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- வழக்கறிஞர் கே.ஏ.திருமலையப்பன்


0 கருத்துகள்